நூருல் ஹுதா உமர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ. அஸ்பர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடை விதிக்குமாறு கோரிய வழக்கு இன்று (23.10.2025) எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் டிசம்பர் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தவிசாளரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டமையை ஆட்சேபித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையை நீக்குவதாக எழுத்து மூல அறிவிப்பை விடுத்திருந்த நிலையிலேயே குறித்த இடைக்காலத்தடை கோரி வழக்கு தவிசாளரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பிரகாரம் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவி வெற்றிடமாக்கப்படுவதுடன் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஏ. அஸ்பர் அவர்களுக்கு மாற்றீடாக கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட வேறு நபரின் பெயர் இன்று அல்லது நாளை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் படி மிக விரைவில் நிந்தவூர் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.