முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ரவிகரன் எம்.பி; குறைபாடுகள்குறித்து கேட்டறிந்தார்

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ரவிகரன் எம்.பி; குறைபாடுகள்குறித்து கேட்டறிந்தார்

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறைகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பிலும் நிலைமைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பாலசுப்பிரமணியம் தஞ்சயன் மற்றும் வைத்தியசாலையின் நலன்புரிச் சங்க நிர்வாகத்தினருடனேயே நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிறுநீரக வைத்தியநிபுணர், நுண்ணுயிரியல் மருத்துவர், நரம்பியல் நிபுணர் உள்ளிட்ட வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுவதால் தம்மால் வினைத்திறனான வைத்தியசேவைகளைத் வழங்கமுடியாதுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்தோடு பெண்நோயியல் வைத்திய நிபுணர் மற்றும் குழந்தைநல மருத்துவ நிபுணர் தலா ஒவ்வொருவரே காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதிலும் குறிப்பாக குழந்தைநல மருத்துவ நிபுணராக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது பணியாற்றிவருபவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கு பதிலீடாக நியமிக்கப்பட்ட குழந்தைநல மருத்துவர் மகப்பேற்று விடுமுறையில் இருப்பதால் தற்போது கடமையில் ஈடுபட்டிருக்கும் குழந்தைநலமருத்துவரை இதுவரை விடுவிப்புச்செய்யாமல் வைத்திருப்பதாகவும், பதிலீட்டு குழந்தைநல மருத்துவர் கடமைப்பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின்னரே தற்போது கடமையிலுள்ள குழந்தைநல மருத்துவர் இடமாற்றத்திற்கு தம்மால் அனுமதிக்கப்படுவார் எனவும் வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளரால் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

அதேவேளை சட்டவைத்திய அதிகாரியும் தற்போது இல்லாதநிலை காணப்படுவதால் மரணவிசாரணைகள் மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை உள்ளிட்ட விடயங்களைக் கையாள்வதில் பல்வேறு இடர்நிலைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைகாணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் கணிய அச்சுவெட்டு வருடி (CT scanner) இல்லாத நிலைகாணப்படுவதாலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துக்கூறப்பட்டது.

அதேபோல் நீண்டகாலப் பயன்பாட்டில் உள்ள நோயாளர் காவுவண்டிகளே தற்போதும் பயன்பாட்டிலுள்ளதால் திடீர்பழுதடைதல் உள்ளிட்ட சிக்கல் நிலைகளும் காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் இதன்போது அண்மையில் இடம்பெற்ற பெண்ணின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கேள்விஎழுப்பினார். குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வைத்திசாலை பிரதிப்பணிப்பாளரால் பதிலளிக்கப்பட்டது. குறித்த விசாரணைகள் முடிவடைந்தவுடன் விசாரணை அறிக்கை பிரதிகளை தமக்கும் கையளிக்குமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் கோரப்பட்டிருந்தது.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் மருத்துவநிபுணர்கள் பற்றாக்குறை தொடர்பிலும், நோயாளர் விடுதி பற்றாக்குறை தொடர்பிலும் தம்மால் ஏற்கனவே சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், குறித்த பற்றாக்குறைகளை தீர்க்குமாறு சுகாதார அமைச்சரிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், இந்த விவகாரங்கள் தொடர்பில் தம்மால் தொடர்நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு சட்டவைத்திய அதிகாரி இன்மை மற்றும் கணிய அச்சுவெட்டு வருடி (CT scanner) இன்மை தொடர்பிலும் தம்மால் கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அதுதொடர்பிலும் தம்மால் தொடர்நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் நடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

இதுதவிர மகப்பேற்று வைத்தியநிபுணர் இன்மை காரணமாக மல்லாவி, மாங்குளம், முறிகண்டி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு மத்தியில் கிளிநொச்சிக்கு நீண்டதூரம் செல்லவேண்டிய நிலையிருப்பதுதொடர்பிலும் தாம் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதாகவும், மாங்குளம் மறுவாழ்வு மருத்துவமனையில் மகப்பேற்று சிகிச்சைக்கான சகல வசதிகளிருப்பதுகுறித்தும், மகப்பேற்றுவைத்தியரை மாங்குளம் வைத்தியசாலைக்கும் நியமிக்குமாறும் தாம் சுகாதார அமைச்சரை வலியுறுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.

இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தம்மால் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஆளணி மற்றும் பௌதீகவள பற்றாக்குறைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்

Bootstrap