அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

நூருல் ஹுதா உமர்

புதிய கல்விச் சீர்திருத்தம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் அடித்தளமாக அமையும். கல்வி மூலமாகவே ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும். அரசாங்கம் மாபியாக்கள் இல்லாத சமநீதி நிலவும், கல்வி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான  ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 28 மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் நடைபெற்ற பாராட்டு விழாவில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “2025ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தின் முன்னேற்றத்திற்கு சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. “2026ஆம் ஆண்டு முதல் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தம் அமுலுக்கு வரும். இது பரீட்சை மையக் கல்வியில் இருந்து செயல்முறை அடிப்படையிலான கல்வியாக மாறும். மாணவர்களின் சிந்தனை திறனை, ஆக்கப்பூர்வ தன்மையை, புத்துணர்வை வளர்க்கும் கல்வி அமைப்பு அமுல்படுத்தப்படும்.”அதன்படி, வகுப்பறை மதிப்பீடுகள் (Continuous Assessment) மற்றும் GPI முறை மதிப்பெண் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும், மொழி மற்றும் வாசிப்பு திறனை வளர்க்க தொடர்ச்சியான வாசிப்பு புத்தகங்கள் வழங்கப்படும்.

மேலும், இலங்கை மீது தற்போது சர்வதேச நம்பிக்கை மீண்டும் உருவாகி உள்ளது. கடந்த ஆண்டில் நாட்டுக்கு வந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்தது. 2029ஆம் ஆண்டுக்குள் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து அரசாங்கம் செயல்படுகிறது.” உலக வங்கியின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சாய்ந்தமருதுக்கென தனியான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எங்களது பிராந்தியத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென நம்புகிறேன்.”

அதன்படி கரைவாகுப்பற்றில் இரும்புப் பாலம், பழைய வைத்தியசாலை வீதி பாலம், கடற்கரை பாலம் உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன, நீர் விநியோக மற்றும் கரைவாகு வட்டை தரிசு நிலங்களை நிரப்பி குடியிருப்புக்களை அமர்த்தும் பணிகளும் சேர்த்தே செயல்படுத்தப்படும் என்றார்

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சுலைஹா பீவி ஆகியோர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதி பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபிர், எம்.எச். றியாஷா, என். வரணியா, யூ.எல். றியால், சாய்ந்தமருது கோட்ட கல்விப்பணிப்பாளர் அஸ்மா ஏ. மாலிக், ஆரம்பக்  கல்வி மற்றும் EPSI ஒருங்கிணைப்பாளர் ஏ.எல்.எம். ஜஹாங்கீர், ஆரம்பக் கல்வி ஆசிரியர் எஸ்.எம்.எம். அன்சார் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  திட்டப் பொறியாளர் எம்.ஐ.எம். றியாஸ், ஷாபாஷ் & அசோசியேட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ  பணிப்பாளரும்  கட்டடக் கலை மற்றும் அளவையியல் வல்லுநருமான எம்.சி.எம். ஹஷீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Bootstrap