வறுமையை கடந்து கல்வி நோக்கி — மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.

வறுமையை கடந்து கல்வி நோக்கி — மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.

பாலநாதன் சதீசன்

முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகள் இன்றையதினம் (19.10.2025) காலை விசுவமடு கிழக்கு அட்டைக்குளம் சிறுவர் பூங்காவில் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலனின் நெறிப்படுத்தலுடன், அன்பாலயம் அமைப்பின் நிதி அனுசரணையோடு தெரிவு செய்யப்பட்ட 15 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

விசுவமடு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வசிக்கும் தூரப்பகுதி மாணவர்கள் கல்வியை இடைநடுவில் நிறுத்தாமல் தொடரவும்,  போக்குவரத்து சிரமத்தை எளிதாக்கவும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முழு பணத்தையும் செலுத்தி துவிச்சக்கர வண்டிகளை பெற முடியாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, முதற்கட்டமாக அன்பாலயம் அமைப்பின் ஊடாக முழுப் பணமும் வழங்கப்பட்டு, பின்னர் தவணை முறையில் பணம் செலுத்தி முடிந்ததும், மேலும் தூரப்பகுதி மாணவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய வழிவகை செய்யப்படவுள்ளது.

அத்துடன் விசுவமடு கிராம மக்கள், மாணவர்கள், முதியோர்கள், விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அண்மையில் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டதன் தொடர்ச்சியாக இம்முறை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், விசுவமடு ஆரம்ப பாடசாலையின் அதிபர் எஸ். யோகராசா, திட்ட இணைப்பாளர் தீ. அனுஸ்ரியா, மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Bootstrap