விஜயரத்தினம் சரவணன்
மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மலைக்காடு கிராமத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார்.
குறிப்பாக முள்ளிக்குளம் கிராமமக்கள் கடந்த 2007ஆம் ஆண்டு அசாதாரணசூழ்நிலைகாரணமாக தமது சொந்த இடத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இவ்வாறு தமது சொந்தக் கிராமமான முள்ளிக்குளத்திலிருந்து வெளியேறிய மக்கள் இதுவரை மீளக்குடியமர்த்தப்படாதநிலையில் தற்போது மலைக்காடு என்னும் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்மக்களின் பூர்வீகக் கிராமமான முள்ளிக்குளத்தினை கடற்படையினர் மற்றும் வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமித்துவைத்துள்ளனர்.
இவ்வாறாக கடற்படையினர் மற்றும் வனவளத்திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள தமது முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்புச்செய்து, தமது பூர்வீக கிராமத்தில் தம்மை விரைந்து மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இதன்போது முள்ளிக்குளம் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்தோடு முள்ளிக்குளம் கிராமமக்களால் தற்போது விவசாயத்திற்கு நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டுவரும் புளியங்குளத்தின் நீரேந்துப் பகுதிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுவருவதாகவும், குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்குமாறும் முள்ளிக்குளம் கிராமமக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் முள்ளிக்குளம் கிராமமக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்கனவே தாம் பாராளுமன்றில் பேசியுள்ள விடயத்தினை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், கடற்படையினால் ஆக்மிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிவிடுவிப்புத் தொடர்பாக பாராளுமன்றில் தம்மால் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வி எழுப்பப்டுமெனவும் தெரிவித்தார். அத்தோடு முள்ளிக்குளம் கிராமத்தின் மீள்குடியேற்றம்தொடர்பாக தம்மால் தொடர்ந்தும் கவனஞ்செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
அதேவேளை புளியங்களுளத்தின் நீரேந்துப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும் தம்மால் உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் மேலும் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.