நூருல் ஹுதா உமர்
நாவிதன்வெளிப் பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு வியாபார உரிமத்திற்கு ஓராண்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கு சபையில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் நளீர் முன்வைத்த பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபை வாதப்பிரதிவாதங்களின் பின்னர் வாக்கெடுப்பின் அடிப்படையில் 15 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் (04 வது சபை அமர்வு) இன்று 2025.10.14 செவ்வாய்க்கிழமை சபை மண்டபத்தில் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் உப தவிசாளர் மற்றும் சகல உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்றது. இந்த அமர்விலையே பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் நளீர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.
தனது உரையில் மதுபான விற்பனை நிலையங்களினால் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முன்வைத்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் குஞ்சர மூர்த்தி நிரோஜன் மதுபான விற்பனை நிலையங்களுக்கு அறவிடப்படும் கட்டணத்தை உயர்த்தினால் மதுப்பிரியர்கள் சிரமப்படுவார்கள் என்றும் இந்த கட்டண உயர்வால் அதை ஈடுசெய்ய போத்தலுக்கு 1000 ரூபாய் உயர்த்த வேண்டி வரும். இதனால் மதுபிரியர்கள் இடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் வரும். அதனால் அரசாங்கமும் சிரமத்தை எதிர்கொள்ளும் என்றார். சபை நாகரிகத்தை பேணுமாறு கோரி இந்த கருத்தை தவிசாளர் ரூபசாந்தன் கண்டித்தார்.
இது தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், பல்வேறு கருத்துக்கள் முன்மொழியப்பட்டதால் சபையில் வாக்கெடுப்பு நடத்தி மதுபான விற்பனை நிலையங்களுக்கு வியாபார உரிமத்திற்கு ஓராண்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 15 ஆயிரமாக உயர்த்த சபை தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும் உறுப்பினர் எம்.பி நவாஸ் அவர்களினால் முன்வைக்கப்பட்ட சாளம்பைக்கேணி-01 இல் அமைந்துள்ள வண்ணாத்தி குளத்தை அளவீடு செய்து எல்லை நிர்ணயம் செய்து தரக் கோரிய பிரேரணை ஆராயப்பட்டது. இங்கு கருத்து வெளியிட்ட உறுப்பினர் எம்.பி நவாஸ் இந்த வண்ணாத்தி குளத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாட்களில் இந்த குளம் இருந்த இடமே இல்லாமல் அழிந்துவிடும். விவசாயிகளின் நன்மைகருதி இந்த விடயத்தில் கரிசனை செலுத்துமாறு கேட்டுக்கொண்டதுடன் இது விடயமாக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவிலும் பேசியதாகவும் நடவடிக்கை எடுப்பதாக கூறிய ஏ.ஆதம்பாபா எம்.பி இதுவரை அதை செய்ய முன்வரவில்லை என்றும். அவர் செயலில் எதையும் செய்வதாக இல்லை. சொல்வதை செய்யும் பழக்கமில்லாத ஒருவராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் இந்த குளம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஏ.ஆதம்பாபா எம்.பி யாரையும் மதிக்காமல் நடந்து கொள்வதாகவும் அவருடைய நடவடிக்கையில் தனக்கும் அதிருப்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் அமரதாச ஆனந்த, ஏ. நளீர் போன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் போதும் ஏ.ஆதம்பாபா எம்.பி தொடர்பில் தனது அதிருப்தியை பதிவு செய்தார்கள். காணி அதிகாரம் சபைக்கு இல்லாததால் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை அரச அதிகாரிகளை நாடி செய்து கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் சொறிக்கல்முனை பொது மயான விடயம், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள், வறிய குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் விடயம், வீதி அபிவிருத்தி விடயங்கள், வடிகான் அமைத்தல், பாலர் பாடசாலை மேம்பாடு, மாடு அறுக்கும் மடுவத்திற்கு மின்சாரம் பெறுதல், பேருந்து தரிப்பிடங்களை புனர்நிர்மானம் செய்தல், அறிவித்தல் பலகை வைப்பது, வடிகானுக்கு முடி இடுதல், பெயர்ப் பலகை நிர்மாணித்தல், இடர் கடன் வழங்குதல், தேசிய வாசிப்பு மாத நிகழ்வினை நடத்துவதற்கான உத்தேச செலவு அறிக்கை, மூன்று மாத கால உள்ளக பயிற்சி மேற்கொள்வதற்கான அனுமதி போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு சபை தீர்மானங்களை எடுத்தது.