Friday 17th of May 2024

வெடுக்குநாறிமலை விவகாரம் சிறீதரன் மௌனமானது ஏன்? பின்னால் உள்ள அரசியல் என்ன?

பிரசுரிக்கப்பட்டது: 2024-03-19 00:40:48

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் சிவராத்திரி வழிபாடுகளை பொலிசார் மிக மோசமான முறையில் தடுத்து நிறுத்தியிருந்தனர். வெடுக்குநாறிமலை வழிபாட்டுக்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்த ஆரம்பித்ததுமே- சிவராத்திரிக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே- சி.சிறிதரன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கோயில் நிர்வாகத்தினர் பேசியிருந்தனர். வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தடுக்க முயற்சியெடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தனர். இதில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், சிறிதரன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அண்மைய தமிழ் அரசு கட்சி தலைவர் தெரிவில் சிறிதரனின் வெற்றியை- தமிழ் தேசியத்தின் எழுச்சியாக அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர். இது போலியான பிம்பம் என்பதை சில தரப்புக்கள் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தனர். சிறிதரனின் வெற்றியை தமிழ் தேசிய வெற்றியாக பிரச்சாரப்படுத்தியவர்களே சங்கடப்படும் விதமாக- வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிறிதரன் செயற்பட்டு வருகிறார். வெடுக்குநாறிமலைக்கு வர வேண்டுமென “வேறு ஒரு தரப்பு“ விடுத்த அழைப்பை ஏற்றே சிறிதரன் அங்கு சென்றிருந்தார் என்பதை தமிழ் பக்கம் அறிந்திருந்தாலும், மேலதிக விபரங்களை இப்போதைக்கு வெளிப்படுத்தவில்லை. கோயில் நிர்வாகத்தினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் நெருக்கமாக செயற்படுகிறார்கள், அவர்களின் ஆலோசனையை கேட்டு மட்டுமே செயற்படுகிறார்கள் என்ற கோபம் சிறிதரனிடம் இருந்தது. தனக்கு நெருக்கமானவர்களிடம் அதை வெளிப்படுத்தியிருந்தார். வெடுக்குநாறிமலைக்கு சென்றாலும் அங்கு எதுவும் பேச மாட்டேன் என குறிப்பிட்டு விட்டே சிறிதரன் சென்றிருந்தார். சிறிதரன் வெடுக்குநாறிமலையில் நின்ற சமயத்தில், பொலிசார் பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் அட்டூழியம் செய்தனர். பின்னர், தண்ணீர் பவுசர் கொண்டு செல்ல முடியாதவாறு அழிச்சாட்டியம் செய்தனர். அப்போதெல்லாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மட்டுமே மக்களுக்காக குரல் கொடுத்திருந்தார். சிறிதரன் வாயே திறக்கவில்லை. வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் சிறிதரன் பின்னரும் வாய் திறக்கவில்லை. வெடுக்குநாறிமலையில் பொலிசார் நடந்து கொண்ட விதம், 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பில் எவ்வாற செயற்படுவதென தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலாமென க.வி.விக்னேஸ்வரன் அழைத்திருந்தார். அந்த சந்திப்பை சிறிதரன் திட்டமிட்டு தவிர்த்திருந்தார். விக்னேஸ்வரன் தரப்பிலிருந்து சிறிதரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த போது, வவுனியா செல்லவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அன்றைய நாளில் நல்லூரிலிருந்து வவுனியாவரை செல்லும் வாகன பேரணியில் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார் என விக்னேஸ்வரன் தரப்பு நம்பியது. ஆனால் சிறிதரன் அந்த வாகன பேரணியிலும் கலந்து கொள்ளவில்லை. விக்னேஸ்வரனின் அழைப்பில் நடந்த கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லையென, இந்த விவகாரத்தில் ஆர்வமுடன் செயற்படும் தரப்பொன்று சிறிதரனிடம் வினவியபோது, விக்னேஸ்வரன் தனக்கு முறைப்படி அழைப்பு விடுக்கவில்லையென சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். “அவர் அடிக்கடி ஆங்கிலத்தில் மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருப்பார். நான் அவற்றை பார்ப்பதில்லை. அப்படியேதும் அனுப்பினாரோ தெரியாது“ என சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில், நாடளுமன்றத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டமொன்றை செய்யலாமா என, ரெலோ தரப்பில் ஒரு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கும் சிறிதரன் உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை. நாளை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் நடக்கவுள்ளதால் அதை குழப்பாமல், அது முடிந்த பின்னர் போராட்டத்தை நடத்தலாம் என சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். இது ஏனைய நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது