Friday 17th of May 2024

பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்; பிங்க் கலர் பஞ்சு மிட்டாயில் நச்சுத்தன்மை

பிரசுரிக்கப்பட்டது: 2024-02-22 03:30:46

கடற்கரைகள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் விற்பனையாகும் பிங்க் கலர் பஞ்சு மிட்டாயில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் உடலுக்கு கேடு விளைவிக்கும் புற்று நோயை உருவாக்கும் நச்சுப் பொருள் கலப்பது உறுதியானது. இதை தொடர்ந்து 'பிங்க்' கலர் பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பொருள் நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவு பொருள் அலுவலர்கள் சென்னையில் கலர் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக உணவு பொருள் அதிகாரி சதீஷ் குமார் :-

“உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய 'பிங்க்' நிறத்தில் தயாரிக்கப்படும் பஞ்சு மிட்டாய் சென்னையில் தற்போது எந்த பகுதியிலும் விற்பனை செய்யப்படவில்லை. கலர் சேர்க்காத வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய கலர் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கலர் பஞ்சு மிட்டாயை தெருக்களில் விற்பனை செய்யும் நபர்கள் அதனை எங்கிருந்து வாங்கி வருகிறார்கள் என்பதை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலர் வீடுகளில் வைத்தே சிறிய மிஷின் மூலமாக பஞ்சு மிட்டாய்களை தயாரித்து வருகிறார்கள். அதில் கலர் சேர்த்தால் அது குற்றமாக கருதப்படும். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெவித்துள்ளார்