Wednesday, November 2, 2022

கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக காலிமுகத்திடலில் கொழும்பில் இன்று பாரிய போராட்டம்



அடக்குமுறைகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு மருதானை பகுதியில் இருந்து இதற்கான பேரணியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை கொழும்பில் பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆசிரியர் சங்கங்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள், சுகாதார தொழிற்சங்கங்கள், பொது போக்குவரத்து சங்கங்கள் மற்றும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக் குழு, சிவில் அமைப்புகள் என்பன இந்த பேரணியில் கலந்துகொள்ளவுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், அவர் பதவி விலகிய பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் காலிமுகத்திடலில் போராட்டங்கள் நடத்துவதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதுடன், அந்தப் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட மூவர் குறித்த சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் அரசாங்கம் ஒடுக்குமுறைகளை கைவிட வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைவிட்டு வரும் அரசியல்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள், அரசாங்கத்திற்கு அது தொடர்பில் வலியுறுத்தும் வகையில் கொழும்பில் இன்று ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

இதேவேளை இந்த போராட்டத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில் கையொப்பமிடும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அடக்குமுறைகளுக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு மக்கள் சக்தியானது நூறு வீதம் தமது ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவொரு அமைதி வழிப்பேரணி எனவும்,அதனை அடக்குவதற்கு பாதுகாப்பு தரப்பினர் தயாராக இருந்தால்,உடனடியாக அந்த தயார்படுத்தல்களை வாபஸ் பெற வேண்டும் எனவும்,அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு எவரேனும் இடையூறு விளைவித்தால்,அதற்கு எதிராக மேற்கொள்ள முடியுமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனநாயக,அமைதி வழிப்பேரணியை எதிர்ப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும், அடக்குமுறைகளின் ஊடாக கைது செய்யப்பட்ட சிறிதம்ம தேரர்,வசந்த முதலிகே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றியே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், ராஜபக்ஷக்களும் மொட்டுவின் ஏனைய மக்கள் பிரதிநிதிகளுமே புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:
Write comments