யாழ் மக்களுக்கு வைத்தியர்கள் அவசர கோரிக்கை!


 யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை முன்வைத்துள்ளது.


நேற்றிரவு (06) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ் அறிக்கையில்,


சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து சென்றுள்ளதுடன் தேசிய மருந்து தட்டுப்பாடு அபாய நிலை காரணமாக சத்திர சிகிச்சை செயற்பாடுகளை பாரிய அளவில் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளும், அவசர நரம்பியல் சத்திர சிகிச்சைகளும், கர்ப்பிணித் தாய்மார்களிற்கான அவசர சத்திர சிகிச்சைகளும் மட்டுமே நடைபெறும்.


மேலும், சில சத்திர சிகிச்சை கூடங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.


இந்த நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு மக்கள் அனைவரையும் ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.


அநாவசிய பயணங்களை குறைப்பதாலும், மட்டுப்படுத்திய வேக கட்டுப்பாட்டுடன், சிரத்தையான வாகனச் செலுத்துகைகளை மேற்கொண்டு வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம், போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது.

No comments:
Write comments