இலங்கை மக்களுக்கு நன்கொடை வழங்குமாறு தமிழக மக்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை


கடும் பொருளாதார நெருக்கடியால் வாடும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய நன்கொடை வழங்குமாறு தமிழக மக்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு தமிழகத்தில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகளை அனுப்ப மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, முதற்கட்டமாக தமிழகத்தில் இருந்து 40,000 தொன் அரிசி, 500 தொன் பால் மா, உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பப்பட உள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள தமிழக முதல்வர், அந்த நிதியில் பொருட்களை கொள்வனவு செய்து இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இணையத்தளம் மூலமாகவும் முதல்வர் பொது நிவாரண நிதியத்தின் வங்கிக் கணக்கிற்கும், SWIFT குறியீட்டை பயன்படுத்தியும் மேலும் சில வழிமுறைகளை பின்பற்றியும் பணத்தை அனுப்பிவைக்க முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-G பிரிவின்கீழ் வருமானவரி விலக்கு பெறலாம் எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஒரு கோடி இந்திய ரூபாவும், திராவிட முன்னேற்றக்கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments