கார் மற்றும் போன் இறக்குமதிக்கு அரசு தடை!


 

காா்கள், கைப்பேசிகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருள்களை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு வியாழக்கிழமை தடை விதித்தது.


'அவசரகால பொருளாதாரத் திட்டத்தின்' கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தானிலும் அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.200-ஆக வியாழக்கிழமை சரிந்தது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காணும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அத்தியாவசியமற்ற பொருள்கள் இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.


இதுகுறித்து பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நாம் சிக்கனத்தைக் கடைப்பிடிப்போம். பொருளாதார ரீதியில் வலிமையான மக்கள் இந்த முயற்சிக்கு தலைமை வகிக்க வேண்டும். அப்போதுதான் முந்தைய அரசால் சுமத்தப்பட்ட சுமையை பொருளாதார ரீதியில் பின்தங்கியோா் சுமக்க வேண்டியிருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.


செய்தித் துறை அமைச்சா் மரியம் ஒளரங்கசீப் கூறியதாவது: நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காா்கள், கைப்பேசிகள், உலா் பழங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆயுதங்கள், உறைந்த இறைச்சி, பழங்கள், ஒப்பனை பொருள்கள், ஷாம்பூ, சிகரெட், இசைக் கருவிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


அவசரகால நிலையைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் பொருளாதாரத் திட்டத்தின்படி பாகிஸ்தான் மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும். அரசு இப்போது ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.

No comments:
Write comments