ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஸக்களின் பாதுகாவலர்: அனுரகுமார தெரிவிப்பு


 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக வௌியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.


நாட்டின் நெருக்கடிகளைத் தீர்க்கும் என ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய ராஜபக்ஸவும் நம்பும் தீர்வை நாட்டில் உள்ள எவராலும் நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ ​​முடியாது என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


'கோட்டாபயவை ரணில் நம்புவதும், ரணிலை கோட்டாபய நம்புவதும் தான் நடக்கும். அவர்கள் செய்வதை நாட்டின் குடிமக்கள் எவரும் நம்பமாட்டார்கள்' என அவர் கூறினார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களின் ஆணைக்கு செவிசாய்க்காமல் தீர்மானங்களை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.


'ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஸக்களின் பாதுகாவலர், அவர் அவர்களின் பாதுகாப்பிற்காக அதிகாரத்தைப் பெறுகிறார். அதே சமயம் ராஜபக்ஸக்கள் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாவலர்கள். அதைத்தான் கடந்த இரண்டரை வருடங்களாக நாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம்,' என்று அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.


மக்களின் கோரிக்கைகளுக்கு யார் செவிசாய்க்கிறார்கள் என்பதில் தான் நெருக்கடிக்கு தீர்வு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.


சூழ்ச்சிக்காரர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தீர்மானங்களே எட்டப்பட்டுள்ளதாகவும், மாளிகைகளில் நடைபெறும் சதிகளின் மூலமாக மக்களின் உண்மையான எதிர்பார்ப்பும், அபிப்பிராயங்களும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


கலாநிதி ஓமல்பே சோபித்த தேரருடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற ​சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.

No comments:
Write comments