பேரறிவாளனின் விடுதலை தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனின் விடுதலை தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.


எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அவரது விடுதலை தொடர்பில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


அவ்வாறில்லை எனின், இந்த விடயம் தொடர்பில் அரசியலமைப்பின் பிரகாரம் தாமே முடிவெடுத்து அறிவிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இந்த வழக்கு தொடர்பில் வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு கூறினால், பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.


அரசியலமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவத்துடன் தொடர்புடைய அதிமுக்கிய விடயமாக இந்த வழக்கை கருதுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


பேரறிவாளன் விவகாரத்தில் பல இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், அதன் நிலை என்னவென வினவியுள்ளனர்.


ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படுவதில் பிரச்சினையில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அத்துடன், பேறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு செவ்வாய்கிழமைக்குள் முடிவெடுக்காவிட்டால், அரசியலமைப்பின் பிரகாரம் முடிவெடுக்கப்படுமென இந்திய உச்ச நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments