ரணிலை பிரதமராக்குவது அரசியலமைப்பிற்கு எதிரானது: கலாநிதி ஓமல்பே சோபித தேரர்


 

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை தவறானது எனவும் அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.


பிரதமராக நியமிப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு எவ்வித அருகதையும் இல்லை எனவும் மக்கள் கேட்பதற்கு மாறான ஒன்று வழங்கப்படுவதாகவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டார்.


தேர்தல் மூலம் தோல்வியடைந்த ரணில் விக்ரமசிங்க, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தலைவர் அல்ல எனவும் இந்த நியமனம் வேறு நோக்கங்களுக்காக இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


ராஜபக்ஸக்களின் பாதுகாப்பிற்காக, அவர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகவே இதனை தாம் பார்ப்பதாகவும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதற்காக ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அழுத்தம் விடுத்து, இலஞ்சம் வழங்கி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு, வெறுமனே ஒருவருக்கு மாத்திரம் அதிகாரம் முழுவதையும் வழங்குவது சட்டவிரோத செயல் எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டார்.


ஜனாதிபதி கடும் குற்றத்தை புரிகின்றார். ஆகவே, நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து செயற்படுமாறு ஜனாதிபதியிடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். இந்த தருணத்தில் இத்தகைய செயற்பாடுகள் ஊடாக மக்கள் எழுச்சிப் போராட்டத்தை பாரதூரமான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள பொதுமக்கள் தயாரில்லை. எனவே, நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்த்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும் நாம் கோருகின்றோம். சர்வமத தலைவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் எடுக்குமாறும் நாம் ஜனாதிபதியிடம் கோருகின்றோம்


என தேரர் மேலும் கூறினார்.


கொழும்பு பேராயருடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற ​சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.

No comments:
Write comments