ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் வீடு, காரியாலயம் தீக்கிரை!


 

முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், இராஜாங்க அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம், வீடுஇ அவரது உறவினரின் வீடு, ஹோட்டல், மற்றும் கடை என்பன நேற்று (10) இரவு தீக்கிரையாக்கப்பட்டதுடன் அவரின் 3 ஆடைத்தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கியதையடுத்து பொலிசார் தாக்குதலை மேற்கொண்டோர் மீது கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடாத்தி கலைத்தனர்.


ஸ்ரீ முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ள ஹாபீஸ் நஸீர் அஹமட், மகிந்த ராஜபஷ அரசிற்கு மாறி இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டார்.


இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 7 மணிக்கு ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயத்துக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அவரின் காரியாலயம் மற்றும் வீட்டை உடைத்து தீயிட்டனர்.


இதனை தொடர்ந்து காரியாலயத்துக்கு அருகில் அவரது உறவினர்களது வீடு ஒன்று ஹோட்டல் மற்றும் கடை ஒன்று ஆகியவற்றை அடித்து நொருக்கி தீவைத்தனர்.


இதன் பின்னர், ஏறாவூர் பகுதியில் அமைந்துள்ள அவரது 3 ஆடைத் தொழிற்சாலைகளை முற்றுகையிட்டு அடித்து நொருக்கி சேதப்படுத்தினர். அதனை தொடர்ந்து அந்த பகுதியில் அமைந்துள்ள மொட்டு கட்சியின் காரியாலய கட்டிடம் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர், எரிபொருள் நிலையம் ஒன்றின் முன்னால் வீதியில் ரயர் போட்டு தீயிட்டதையடுத்து அங்கு சென்ற பொலிசார் அவர்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என தெரிவித்த போது பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.


இதனையடுத்து வன்முறைகளில் ஈடுபட்டோர் மீது கலகம் அடக்கும் பொலிசார் கண்ணீர் புகைகுண்டு தாக்குதலை நடாத்தி அவர்களை கலைத்தனர். இந்த நிலையில் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு தாக்குதலை மேற்கொண்டோரை அடித்து கலைத்ததுடன் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு முக்கிய சந்திகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.


இதேவேளை, மட்டக்களப்பு மென்ரசா வீதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டை நேற்று இரவு 7 மணிக்கு முற்றுகையிட இளைஞர்கள் அந்த பகுதியில் உள்ள சந்திகளில் ஒன்று கூடியிருந்ததையடுத்து அவரின் வீட்டை சுற்றி பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை தொடாந்து அங்கு மேலதிக பாதுகாப்பிற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதையடுத்து அங்கு கூடியிருந்த இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments