இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவைகள்!


 

விமான நிலையத்தில் 220 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதையில் இருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.


முதலாவது விமானம் இன்று காலை 8.40 ற்கு மாலைதீவில் இருந்து இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைகிறது.


இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து முதலில் மாலைதீவிற்கான விமான சேவை ஆரம்பமாவதுடன் பின்னர் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கும் இங்கிருந்து விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படும்.


வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி வருமானத்தை அதிகரிப்பதற்காக கொழும்பு ரத்மலான சர்வதேச விமான நிலையம் மூலம் மேற்கொண்ட மிக முக்கியமான உட்கட்டமைப்பு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.


இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 55 வருடங்களின் பின்னர் இன்று தொடக்கம் மீண்டும் தனது சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாகவும், அபிவிருத்தியின் பின்னர் விமான ஓடுபாதை மற்றும் ஓடும் திறன் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


இலங்கையின் தனியார் விமான நிறுவனமான பிட்ஸ் ஏர் நிறுவனமும் மாலைதீவு விமான சேவை நிறுவனமும் இணைந்து தமது சேவைகளை நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


குறைந்த செலவிலான விமான பயணங்களை மேற்கொள்ள சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான நிதியை சிவில் விமான சேவைகள் அதிகார சபை, விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


No comments:
Write comments