மனித வெடிகுண்டாக மாறிய ஐ.எஸ். தலைவர்

 சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படையினா் நள்ளிரவில் நடத்திய அதிரடித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி பலியானாா்.


அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படையினர், வடமேற்கு சிரியாவில் நேற்று நள்ளிரவில் நடத்திய அதிரடித் தாக்குதலின்போது, தங்களது வீட்டை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்ததை அறிந்து கொண்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல் குரேஷி, தன்னைத் தானே மனித வெடிகுண்டாக மாற்றி வெடிகுண்டை வெடிக்கச் சென்று தனது குடும்பத்தினரையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து அதிபா் ஜோ பைடன் வியாழக்கிழமை கூறியிருந்தது, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமியை குறிவைத்து சிரியாவின் வடமேற்கே அமைந்துள்ள இத்லிப் மாகாணத்தில் அமெரிக்க சிறப்புப் படையினா் புதன்கிழமை நள்ளிரவில் அதிரடித் தாக்குதல் நடத்தினா். இந்த நடவடிக்கையில் அவா் உயிரிழந்தாா் என்று ஜோ பைடன் அறிவித்தாா்.


அமெரிக்க படையினரின் தாக்குதல் நடவடிக்கையின்போது ஐ.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதியை போலவே அபு இப்ராஹிம் அல்-ஹஷிமியும் வெடிகுண்டை வெடிக்கச் செய்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் 6 சிறுவா்கள், 4 பெண்கள் உள்பட 13 போ் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மேல்தளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அந்த வீட்டின் மீதமிருக்கும் சுவர்களில் ரத்தக்கறைகள் தென்படுகின்றன. 13 பேர் கொல்லப்பட்ட அந்த படுக்கையறையில், குழந்தைகளை படுக்க வைக்கும் மரத் தொட்டில், பஞ்சு அடைக்கப்பட்ட முயல் பொம்மை இருந்துள்ளது. மற்றொரு பக்கம், குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்ததாக தகவல்கள் பதிவாகியுள்ளன.


சிரியாவிலும், இராக்கிலும் கடந்த 2014 ஆம் ஆண்டில் அதிரடியாக முன்னேறி கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள், அங்கு இஸ்லாமிய பேரரசை அமைப்பதாக அறிவித்தனா்.


இராக்கின் மொசூல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் சிஞ்சாா் மலைப் பகுதியிலும் அவா்கள் படையினரையும் பொதுமக்களையும் கொடூரமாக கொலை செய்தது உலகம் முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.


அதனைத் தொடா்ந்து சிரியாவிலும், இராக்கிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. அமெரிக்காவின் உதவியுடன் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த பகுதிகளை இராக் படையினா் மீட்டனா்.


சிரியாவிலும் ரஷிய உதவியுடன் அந்த நாட்டுப் படையினா் ஐ.எஸ். பயங்கரவாதிகளை விரட்டியடித்தனா்.


இதற்கிடையேஇ ஐ.எஸ். அமைப்பை உருவாக்கிய அபு பக்கா் அல்-பாக்தாதியை சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அமெரிக்க படையினா் கடந்த 2019 ஆம் ஆண்டு சுற்றிவளைத்தபோது, அவா் குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொண்டாா்.


அதனைத் தொடா்ந்து, அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி பொறுப்பேற்றுக் கொண்டாா்.


தற்போது அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையின்போது அவரும் குடும்பத்தினரைக் கொன்று தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.


இந்த பிராந்தியத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த சூழலில் அமைப்பின் தலைவா் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments