கொரோனா ஊரடங்கு - மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!


 

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் அதிகமாக மது அருந்தியதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.


கொரோனா என்றும் பெருந்தொற்றின் அலை இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் ஓயவில்லை. வைரஸ் பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டினுள் முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. மக்கள் வீட்டில் முடங்கியிருந்த காலத்தில் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மது அருந்தும் அளவு அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.


வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்த மற்றும் வீட்டில் குழந்தைகளுடன் இருந்த 50 வயதுக்குள்பட்ட பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் இதனால் அதிகமாக மது அருந்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


´ஃபிரன்டியர்ஸ் இன் சைக்கியாட்ரி ஜர்னலில், இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


ஊரடங்கின்போது அதிகமாக மது அருந்துபவர்கள் ஊரடங்குக்குப் பிறகும் இதே நிலையைத் தொடர்வார்கள் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர் டாக்டர் ஜாஹீர் ஹியா கூறினார்.


இதற்காக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உட்பட 38 நாடுகளில் 37,206 வயது வந்தோரிடம் 2020 ஜூன்-ஏப்ரல் காலகட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.


இதில் ஊரடங்கு காலத்தில் 20.2 சதவீததினரிடம் குடிப்பழக்கம் அதிகரித்தது. அதேநேரத்தில் 17.6 சதவீதத்தினரிடம் மதுப்பழக்கம் குறைந்துள்ளது.


ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (53.3 சதவீதம்) தொற்றுநோய் காலத்தில் உளவியல் ரீதியான துன்பங்களை அனுபவித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


குழந்தைகளுடன் இருப்பது, வீட்டிலிருந்து வேலை செய்தல் உள்ளிட்ட பிரச்னைகளால் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் இதனால் பெண்கள அதிகமாக மது அருந்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.


மேலும், ஊரடங்கிற்கு முன்னதாகவே பலரும் மதுவை வாங்கி பதுக்கி வைத்து பயன்படுத்தியுள்ளதாகவும் ஆய்வாளர் கூறுகிறார்.


´நீங்கள் மதுவை சேமித்து வைத்தால், அதிகமாக மது அருந்த விரும்புவீர்கள். மதுவை சேமித்து வைப்பதைவிட, உங்கள் மனநலனைப் பற்றி அறிந்து கொள்வதும், உடற்பயிற்சி, சிந்திக்கக்கூடிய விஷயங்களில் ஈடுபடுவதும் இந்த சூழ்நிலையை சமாளிக்கும் வழிமுறைகள். தொலைபேசி அல்லது ஆன்லைனில் மனநல ஆதரவுக்கான ஹெல்ப்லைன் எண்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள்´ என்றும் ஹியா தெரிவித்தார்.


ஆல்கஹால் அதிகமாக பயன்படுத்துவது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி உடலில் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைப்பதன் மூலம் கரோனா தொற்று பாதிப்பு எளிதில் ஏற்படுகிறது´ என்றும் கூறினார்.


மாறாக, ஏற்கெனவே மதுவுக்கு அடிமையான சிலர், இந்த ஊரடங்கு காலத்தில் அதில் இருந்து மீண்டு வரவும் வாய்ப்பளித்தது´ என்றார்.

No comments:
Write comments