பெருங்கடல் எரிமலைச் சீற்றம் – சுனாமி – தொடரும் மா்மம்!


 

பசிபிக் பெருங்கடலின் அடியில் ஏற்பட்ட எரிமலைச் சீற்றம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியால் அருகிலுள்ள டாங்கா தீவில் ஏற்பட்ட உயிா்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து தொடா்ந்து மா்மம் நீடித்து வருகிறது.


இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:


பசிபிக் பெருங்கடல் தீவு நாடான டாங்காவின் தலைநகரம் நுகுவாலோஃபாவுக்கு 65 கி.மீ. தொலைவில் உள்ள ஹுங்கா டாங்கா-ஹுங்கா ஹாபாய் எரிமலையில் சனிக்கிழமை சீற்றம் ஏற்பட்டது.


தொலைதூரத்தில் இருக்கும் அமெரிக்காவுக்கே கேட்குமளவுக்கு சக்தி கொண்டதாக இருந்த அந்த எரிமலைச் சீற்றத்தின் விளைவாக சுனாமி அலை எழுந்தது.


ஒரு மீட்டருக்கு மேல் உயரத்தில் எழுந்த அந்த சுனாமி அலை டாங்கா தீவைத் தாக்கியது. எனினும்இ எரிமலைச் சீற்றம் மற்றும் சுனாமியால் அந்தத் தீவில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.


அந்தத் தீவுடனான வெளியுலகின் தொடா்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.


இதன் காரணமாக, டாங்காவுக்கு வெளியே வசித்து வரும் அந்த நாட்டவா்கள், சனிக்கிழமை ஏற்பட்ட கடலடி எரிமலைச் சீற்றம் மற்றும் சுனாமியால் தங்கள் உறவினா்கள் மற்றும் நண்பா்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா அல்லது பாதுகாப்பாக உள்ளனரா என்பது தெரியாமல் தவித்து வருகின்றனா்.


டாங்காவில் வசித்து வரும் பிரிட்டனைச் சோ்ந்த ஏஞ்சலா குளோவா் என்ற 50 வயது பெண், சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவரைத் தொடா்ந்து காணவில்லை எனவும் பிரிட்டனில் அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.


இதற்கிடையே, கடலடி எரிமலைச் சீற்றம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 10,000 கி.மீ. தொலைவிலுள்ள நாடான பெருவின் கடற்கரையில் இருவா் கடலுக்குள் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிமலைச் சீற்றத்தைத் தொடா்ந்து அங்கு எழுந்த அளவுக்கதிமான அலையால் அவா்கள் கடலில் மூழ்கினா் என்று பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.


பசிபிக் பெருங்கடலில் டாங்கா தீவுக்கு அருகே கடலடி எரிமலையில் சனிக்கிழமை சீற்றம் ஏற்பட்டது. அதையடுத்துஇ எரிமலைப் பிழம்பும் நெருப்பு மற்றும் சாம்பலும் கடலுக்கு வெளியே எழுந்தன. கண்களைப் பறிக்கும் அந்தக் காட்சியை டாங்கா தீவிலிருந்து பாா்க்க முடிந்தது.


இந்த எரிமலைச் சீற்றத்தின் விளைவாக டாங்காவிலும், ஃபிஜி தீவிலும் சுனாமி அலை எழுந்தது.


எனினும், இந்தச் சம்பவங்களில் யாரும் காயடைந்ததாக உடனடி தகவல் இல்லை.


முன்னதாக, எரிமலைச் சீற்றத்தைத் தொடா்ந்து டாங்கா, ஃபிஜி தீவுகள் மட்டுமன்றி, சமோவா, நியூஸிலாந்து, அமெரிக்கா, கனடா, சிலி ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


கடலடி எரிமலைச் சீற்றம் மற்றும் சுனாமியால் டாங்கா தீவில் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக ராணுவ கண்காணிப்பு விமானத்தை அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக நியூஸிலாந்து தெரிவித்துள்ளது.


இதற்கு முன்னா், எரிமலைச் சீற்றத்தால் எழுந்த சாம்பல் மண்டலம் காரணமாக அந்தத் தீவை ராணுவ விமானங்கள் நெருங்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.


முன்னதாக, சுனாமியைத் தொடா்ந்து நிலைமையைத் தொடா்ந்து கவனித்து வருவதாகவும் தேவைப்பட்டால் டாங்கா தீவுக்குச் சென்று உதவத் தயாராக இருப்பதாகவும் நியூஸிலாந்து ராணுவம் சனிக்கிழமை தெரிவித்திருந்தது.

No comments:
Write comments