இரண்டு தடவைகள் சஹரானை காப்பாற்றிய மைத்திரி..! கைது செய்யப்படுவாரா?இலங்கையில் இடம்பெற்ற ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமை கைது செய்ய முயன்ற வேளை அவரைக் காப்பாற்றியது வேறு யாருமல்ல முன்னாள் ஜனாதிபதி பல்லேவத்த கமராலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என தெரியவந்துள்ளது. அதில் ஒரு சந்தர்ப்பம் 2017 ஆம் ஆண்டும் இரண்டாவது சந்தர்ப்பம் 2018ம் ஆண்டும் இடம்பெற்றுள்ளன. 

2017 ஆம் ஆண்டு சிறிசேன சஹரானை காப்பாற்றிய விதம்..

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு தினத்தில் காத்தான்குடி அலியார் பேக்கரி சந்தியில் சஹரான் அவருடைய சகோதரனான ரில்வான் மற்றும் அவருடைய உதவியாளர்கள் ஷாஜகான், ஆட்டோ ரியாஸ், அன்வர் மற்றும் சைனி உள்ளிட்ட நபர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். காத்தான்குடி என்பது சஹரான் கடைபிடித்த வஹாப்வாத கொள்கையை கடைபிடிக்காத சூபி முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசமாகும். இங்கு சஹரான் உள்ளிட்ட குழுவினர் வாள், பொல்லுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை கொண்டு அங்கு வசிக்கின்ற மக்கள் வீட்டிற்குள் புகுந்து அவர்களை அடித்து துன்புறுத்தி அச்சுறுத்தினர். பிரதேசத்திலுள்ள மக்கள் வாளால் வெட்டப்பட்டு உள்ளனர். 'இன்று ஒருமுறைதான் வெட்டி உள்ளோம் இதற்குப் பின்னர் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் உங்கள் அனைவரையும் வெட்டுவோம்' என்று பிரதேச மக்களை சஹரான் அச்சுறுத்தி உள்ளார். இந்த சம்பவம் அடங்கிய புகைப்படம் எங்கு இணைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு சந்தேக நபர் இந்த சம்பவத்தை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். எனினும் பிரதான சந்தேகநபரான சஹரான் மற்றும் அவரது சகோதரர் ரில்வான் ஆகியோர் பொலிசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாகினர்.

மைத்திரிக்கு ஆலோசனை வழங்கிய மைத்திரி.. 

இந்த சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களுக்கு பிணை பெற்றுக் கொடுக்க நீதிமன்றில் ஆஜராகியது வேறு யாருமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அப்போதைய ஆலோசகராக இருந்த சிறிசேனவினால் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட மைத்திரி குணரத்ன ஆவார். இதற்கென மைத்ரி குணரத்ன கொழும்பிலிருந்து மட்டக்களப்பு சென்றுள்ளார். மட்டக்களப்பு செல்லுமாறு மைத்திரி குணரத்னவிற்கு ஆலோசனை வழங்கியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என லங்கா ஈ நியூஸ் இணையத்துக்கு தெரியவந்துள்ளது.

சஹ்ரான் குழுவினருக்கு கொழும்பில் முஸ்லிம் சட்டத்தரணி ஒருவரை பிடித்துக் கொள்வது மிகவும் இலகுவான விடயமாகும். காரணம் சஹரான் குழுவினரிடம் போதியளவு பணம் இருந்தது. பணம் கொடுத்து பைசர் முஸ்தபா அல்லது அலி சப்ரி போன்ற சட்டத்தரணிகளை பிடித்துக் கொள்ள சஹரான் குழுவினருக்கு வாய்ப்பு இருந்த போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆலோசனை வழங்கியதால் கொழும்பில் இருந்து சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மட்டக்களப்பு சென்றுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றில் ஆஜராகி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 9 பேருக்கும் பிணை பெற்றுக் கொடுத்தார். இதனால் பிரதான சந்தேகநபர்களான சஹரான் மற்றும் ரில்வான் ஆகியோரை கைது செய்வதற்கான சந்தர்ப்பம் கைநழுவிப் போனது. சஹரான், ரில்வான் உள்ளிட்ட சிலர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தனர். மைத்திரி குணரத்ன செய்த செயலுக்காக பிற்காலத்தில் மைத்திரிபால சிறிசேன அவருக்கு ஆளுநர் பதவி கொடுத்தார்.

2018 ஆம் ஆண்டு சிறிசேன சஹரானை காப்பாற்றிய விதம்..

2018 ஆம் ஆண்டு மைத்ரிபால சிறிசேன சஹரான் குழுவினரை காப்பாற்றிய விதம் நாட்டில் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. சஹரானை கைது செய்யவென நீதிமன்றில் பகிரங்க பிடியாணை பெற்று அதற்கு தயார் நிலையில் இருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா மீது போலி குற்றசாட்டு சுமத்தி அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதற்கான அனைத்து சதி வேலைகளையும் மைத்திரிபால சிறிசேனவே மேற்கொண்டார். கோட்டாபய ராஜபக்சவையும் தன்னையும் கொலை செய்ய சதி நடப்பதாக தன்னிடம் சம்பளம் பெற்று வேலை செய்யும் நாமல் குமார என்ற பொய்க்காரனை ஏவி விட்டு ஊடகங்களில் செய்தி வெளியிட்டு நாலக்க டி சில்வாவை கைது செய்து சிறை வைத்தது மைத்திரிபால சிறிசேனவே. இதன் மூலம் சஹ்ரான் குழுவினர் கைது செய்யப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டார். இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிந்துகொண்டே செய்த சக்தியாகும். 

தற்போது இந்த விடயம் நன்கு உறுதியாகியுள்ளது. காரணம் நாலக்க டி சில்வா சதி செய்ததாக கூறிய மாகந்துரே மதுஷ் மற்றும் நாமல் குமார ஆகியோர் இன்று விளக்கமறியலில் உள்ளனர். இந்த சதித்திட்டம் குறித்து மதுஷிடம் விசாரணை நடத்தப்பட்டதா என தெரியவில்லை. அவ்வாறு இவர்கள் ஏதேனும் தகவல்களை வெளிப்படுத்தி இருந்தால் அதிகாரிகள் வெறுமனே இருக்க மாட்டார்கள். எனவே மைத்திரிபால சிறிசேன நாமல் குமாரவை வைத்து போட்ட நாடகம் பொய்யானது என்பது அம்பலமாகியுள்ளது. சஹரான் கைது செய்யப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே மைத்திரிபால சிறிசேன நாமல் குமாரவுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி நாடகமாடி நாலக டி சில்வாவை கைது செய்ய வைத்துள்ளார்.

சிறிசேன பொய் கூறியது அம்பலம்..

ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப் போவதாக இந்தியாவின் புலனாய்வுத் துறை வழங்கிய முன்கூட்டிய எச்சரிக்கைத் தகவலை அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்த்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார். இவை அனைத்தும் தெரிந்து கொண்டே மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் நோக்கி சென்றதுடன் சம்பவத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு உடனே நாட்டுக்கு திரும்ப வாய்ப்பு இருந்த போதும் சம்பவம் நடந்த நாள் அன்று இரவே மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார். விமானத்தில் ஆசனங்கள் இருக்கவில்லை என மைத்திரிபால சிறிசேன கூறியது பொய் என்பது இன்று நாட்டு மக்கள் மத்தியில் உறுதியாகி உள்ளது.

சிறிசேன கைது செய்யபடுவாரா?

எனவே முன்னூறுக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டு இடம்பெற்ற இந்த மோசமான சம்பவத்திற்கு முழுமையான பொறுப்பு கூற வேண்டிய மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படுவாரா? . ஞாயிறு குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவர் என தேர்தல் மேடைகளில் கூறிக்கொண்டு 69 லட்சம் மக்களின் வாக்குகளை பெற்ற 'வேலை செய்யும் வீரர்' என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் நந்தசேன கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டுமென அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்.