யாழ் மாநகர எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் தூபி கட்ட தீர்மானம் நிறைவேற்றம்!

 


யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய (13) சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றையதினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கடந்த 8ம் திகதி யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.மாநகர சபை மூன்று கண்டன தீர்மானங்களை நிறைவேற்றியது.

நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து சபை அமர்வு ஐந்து நிமிடங்கள் ஒத்திவைத்தல், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் உள்னுழைந்தமையை கண்டித்தல் மற்றும் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி அமைத்தல் ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டார்.