இலங்கையில் சிங்களவருக்கொரு நீதி, தமிழருக்கொரு நீதியா?

 


விஜயரத்தினம் சரவணன்தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறைகளிலே வாடுகின்றனர். அவர்களின் விடுவிப்புத் தொடர்பில் அரசதரப்பு கரிசனை செலுத்துவதில்லை.

ஆனால் பாரிய குற்றச்செயல்களுடன் கைதுசெய்யப்பட்ட பௌத்த தேரர்களையும், மரணதண்டனை விதிக்கப்பட்ட பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளையும் பொது மன்னிப்பு அடிப்படையில் அரசு விடுதலைசெய்கின்றது.

அப்படியாயின் இந்தநாட்டில் சிங்களவர்களுக்கொரு நீதி, தமிழர்களுக்கொரு நீதியா? இவ்வாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு - மாவட்டசெயலகத்தின் முன்பாக, 05.01.2021இன்று அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (எக்டோ) அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆற்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுடைய தமிழ் அரசியல் கைதிகள்  நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இவ்வாறு நீண்டகாலம் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு பழிவாங்கப்படுகின்றார்கள் என்பதே உண்மையாகும்.

ஆயுத வழக்கொன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதி ராஜரம விகாராதிபதி உபாதின்ன சுமணதேரருக்கு அசதலைவரால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் உட்பட எட்டுத் தமிழர்களைப் படுகொலைசெய்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்காவிற்கு கடந்த ஆண்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதற்கு முன்னர் முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறீசேனவின் ஆட்சிக்காலத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தண்டனைக்கைதியாக தடுத்துவைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இவற்றை ஏன் சுட்டிக்காட்டுகின்றேன் எனில், சிங்களவர்களுக்கொரு நீதி தமிழர்களுக்கொரு நீதியா? என எண்ணத்தோன்றுகின்றது.

அரசியல் கைதிகள் பயங்கரவாதிகள் எனில், அவர்களை வழிநடாத்திய பொறுப்புவாய்ந்த பலர் வெளியிலே சுதந்திரமாக உலாவருவது ஏன்?

குறிப்பாக அரசுக்கு சார்பாக இருக்கும் பல முக்கியமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அப்பாவிகளே தற்போதும் சிறைகளில் வாடுகின்றார்கள்.

அந்தவகையில் அரசுக்கு சார்பாகச் செயற்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சுதந்திரமாகச் சுற்றித் திரிக்கின்றார். சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவரும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றார்.

ஆனால் அவர்களுக்கு கீழ் இருந்த அப்பாவிகள், அப்பாவிப் பொதுமக்கள் சிறைகளிலே தற்போதும் நீண்டகாலமாக வாடுகின்றார்கள். சிறைகளிலே மரணமடையும் அவலமான சம்பவங்களும் பதிவாகின்றன.

அரசியல் கைதிகளுடைய குடும்பங்களை யாருமே கவனிக்காத நிலையில் அவர்களும் பலத்த இன்னல்களுக்கு முங்கொடுத்துவருகின்றனர்.

அரசாங்கம் என்பது நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவாக செயற்படவேண்டும். தனியாக சிங்களவர்களுக்கு மாத்திரம்தான் அரசாங்கமென செயற்படுவது நியாயமான செயற்பாடல்ல.

எனவே தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்புவழங்கி விடுதலைசெய்யப்படவேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றார்