இராணுவம் படுகொலை செய்த ஊடகவியலாளர் நினைவேந்தல்!இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட மூத்த தமிழ் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35ம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று (25) அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவ அதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியராளரின் சகோதரரான கவிஞர் ஓய்வுபெற்ற அதிபர் அக்கரைப் பாக்கியன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை பாக்கியராசா மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் சகோதரர் பாக்கியராசா கருத்துத் தெரிவிக்கையில்,

“ஊடகவியலாளர் என்ற காரணத்தினால் தான் எனது சகோதரன் கடந்த 1985.12.25 அன்று அம்பாறை கொண்டவட்டுவானில் வைத்து இராணுவத்தினாரால் படுகொலை செய்யப்பட்டார். 1985ம் ஆண்டும் இதுதான் நடைபெற்றதும் இதுதான். 1985.12.23 அன்று அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட பல பகுதிகளும், இராணுவதிரால் சுற்றிவழைக்கப்பட்டன. அதிலேதான் எனது சகோதரன் தேவராஜாவும் அகப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு கொண்டவட்டுவான் முகாமில் வைக்கப்பட்டிருந்தார்.

அப்போதிருந்த அமைச்சர் இரங்கநாயகி பத்மநாதனுடனும் தொடர்பு கொண்டு பல பிரயத்தனங்களைச் செய்தும் எனது சகோதரனை மீட்க முடியாமல் போய்விட்டது. பின்னர் 1985.12.25ம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியின் 6 மணி செய்தியில் சொல்லப்படுகின்றது, கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசா படுகொலை செய்யப்பட்டார். இதுதான் உண்மை.” – என்றார்.