கொவிட் தொற்றாளர் முகத்தில் துப்பியதால் பரபரப்பு! அதிகாரிகள் ஐவர் விலகல்

 


பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் பண்டாரகம சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள அட்டலுகம கிராம சேவகர் பிரிவில் ஐந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தமது கடமைகளிலிருந்து பின்வாங்கியுள்ளதாக பொதுச்சுகாதார அதிகாரிகள் சங்கச் செயலர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.

அட்டலுகம பகுதியில் இதுவரை 300க்கு மேற்பட்ட கொவிட்-19 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதால் அநேக நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எனினும் இந்தப்பகுதிகளில் வசிப்பவர்கள் பொதுச் சுகாதார அதிகாரிகளுடன் முறைகேடான முறையில் நடந்து கொண்டனர். ஒரு கொவிட்-19 தொற்றாளரை அவரது வீட்டில் தங்குமாறு அறிவுறுத்திய போது அவர் அதிகாரியின் முகத்தில் துப்பினார் என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் காரணமாக பண்டாரகம சுகாதார அதிகாரி பிரிவின் ஏழு பொதுச் சுகாதார அதிகாரிகளில் இருவர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள ஐவரும் அட்டலுகம பகுதியில் தங்கள் கடமையைச் செய்ய மறுத்துவிட்டனர். ஆனால் ஏனைய பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.