முல்லையில் வலுப்பெறும் சட்டவிரோத கடற்றொழில்களால் மீனவர்கள் பாதிப்பு; டக்ளஸ் சட்டவிரோத தொழில்களை ஊக்குவிக்கின்றாரா?

 


 


விஜயரத்தினம் சரவணன்


முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும், இந்திய மீனவர்களினாலும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இந் நிலையில் வடமாகாணரீதியாக நிபந்தனைகளுடன் கூடிய அட்டைத் தொழிலுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே கடற்றொழில் அமைச்சர்தான் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுளை ஊக்குவிக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை தென்னிலங்கை மீனவர்கள் மேற்கொண்டு வருவதாலும் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஏற்கனவே சுருக்குவலை,வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், வெடிவைத்து மீன் பிடித்தல் போன்ற தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், சம்மேளனம் மற்றும் மீனவ மக்கள் அனைவரும் திரண்டு பல போராடடங்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுபடுத்தஅரசு கூடியகவனம் எடுத்திருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.


சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துமாறு மீனவர்கள் அரசிடம் கோரியிருந்த நிலையில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்களே தவிர, கடற்றொழில் அமைச்சோ, அல்லது கடற்றொழில் திணைக்களமோ சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

எமது மீனவர்கள் எமது கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது என்றுதான் கேட்கின்றனர்.

தாம் சிறுதொழில்களாக, குறிப்பிட்டளவு தொழில்களை இலங்கை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய மீன் பிடிச் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிலையில், சட்டவிரோதிகளாக தென்னிலங்கை மீனவர்களும், இழுவை மடிகளைப் பயன்படுத்தி இந்திய இழுவைப் படகுகளும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதனால் தாம் முற்று முழுதாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

தற்போது கார்த்திகை, மார்கழி , தை, மாசி போன்ற மாதங்களில் குறிப்பிட்டளவு நாட்களுக்குள் மாத்திரம் இறால் தொழில் முல்லைத்தீவில் அமோகமாக இடம்பெறும். இந் நிலையில் தற்போது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்களில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் எமது மீனவர்களின் இறால் தொழிலும் கேள்விக்குறியாக்கப்படுகின்றது.

எனவே இத்தகைய செயற்பாடுகளைத் தடுக்கவேண்டியது யார்? இலங்கை அரசின் உரிய திணைக்களங்கள் மற்றும் உரியஅமைச்சும் அதோடு சேர்ந்து இவர்களுடைய அறிவித்தலுக்கேற்ப கடற்படையினரும் இணைந்துதான் இச் சட்டவிரோத செயற்பாடுகளையும் அத்துமீறல்களையும் தடுக்கவேண்டும்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்காமல், முல்லத்தீவு மீனவர்கள் பட்டினிச்சாவினுள் தள்ளப்போகின்றதா அரசு என்ற கேள்வி எழுகின்றது.

ஒரு தமிழ் அமைச்சர் கடற்றொழில் அமைச்சராக இருந்துகொண்டு இந்த சட்ட விரோத தொழில் நடவடிக்கைகளை அவர் ஊக்குவிக்கின்றாரா என்றுதான் கேள்வி எழுப்பவேண்டியுள்ளது.

ஏன்எனில் வடமாகண ரீதியாக அட்டைத் தொழிலுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, நிபந்தனைகளுடன் அட்டைத் தொழில் செய்ய அனுமதிக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சருடைய அறிக்கைகளை பார்க்கமுடிகின்றது. நிபந்தனைகளுடன் அட்டைத் தொழிலுக்கு அனுமதி வழங்கினாலும் பல்வேறு சட்டவிரோத தொழில்கள் கடலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறான அனுமதிகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டால் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம்மற்றும் சமேளனம் உள்ளடங்கலாக மீனவர்களுடன் இணைந்து பாரிய போராட்டத்தினை மேற்கொள்வோம்.

மேலும் உரியவர்கள் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் - என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்