ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஊடகங்களுடாக சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் புத்திஜீவிகளுக்கு இருக்கிறது

 (சர்ஜுன் லாபீர்)


முஸ்லிம் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் அதிலும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜனாஸா எரிப்பு தொடர்பான நியாயமான காரணங்களை ஊடகங்களுடாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு புத்திஜீவிகளுக்கு இருக்கின்றது.என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.

சிலோன் மீடியா போரத்தின் புதிய டீ-சேர்ட் அறிமுக நிகழ்வு இன்று(14) போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜிட் தலைமையில் நடைபெற்ற போது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டு இருந்தார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

சிலோன் மீடியா போரமானது குறுகிய காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டு ஊடகவியலாளர்களின் நலன்களில் மட்டும் அக்கரை கொள்ளாது மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டு உயிரோட்டமாக செயற்படுவதனை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக கொரோனா தாக்கத்தின் பின்னர் சிலோன் மீடியா போரம் மக்களை விழிப்பூட்டுகின்ற செயற்பாடுகளையும் மேலும் பல்வேறுபட்ட விடயங்களை செய்து வருகின்றது.

இந்த நாட்டில் கொரோனா தீவிரமாக பரவிவருகின்ற காலகட்டத்தில் இந்த நோய் பரவுவதனை தடுப்பதற்கான செயற்திட்டத்தினை சிலோன் மீடியா போரம் மேற்கொண்டு இன்னும் கூடுதலான முறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகள் இன்று சவாலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.எனவே அது சம்மந்தமாக குறிப்பாக கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விடயத்திலும் கூட அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கூட சவாலுக்கு உட்படுத்துகின்ற செயற்பாடுகள் இன்று தென்னிலங்கையில் சில ஊடக நிறுவனங்களிலும்,சமூக வலைத்தளங்களிலும் இன்று மிக தீவிரமான பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.எனவே இது சம்மந்தமாக எங்களுடைய முஸ்லிம் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் அதிலும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் நியாயமான காரணங்களை ஊடகங்கள் ஊடாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

மேலும் எமது சமூகத்தில் சிறந்த ஊடகவியலாளர்கள், சிறந்த ஊடக நிறுவனங்கள் வலுவான முறையில் கட்டியெழுப்பப்பட வேண்டும் அதற்காக சிலோன் மீடியா போரம் வலுவான திறமையான பல மொழிகளிலும் செய்திகளை கொண்டு செல்லுகின்ற திறமைமிக்க ஊடக வல்லுனர்களை உருவாக்க வேண்டும். அதற்காக வேண்டி முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என குறிப்பிட்டார்

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் நெளபர் ஏ பாவா,கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிவின் இணைப்பாளர் எம்.இன்சாட், சிலோன் மீடியா போரத்தின் உப தலைவர் எஸ் அஸ்ரப்கான், பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர்,முன்னாள்.இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப் தில்சாத் உட்பட போரத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.