றிசாட் பதியுதீனுக்கு எதிராக மாத்திரம் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந் நிலைமைகள் வேதனை அளிக்கும் கசப்பான பழிவாங்கும் நடவடிக்கைகளே

 ஹஸ்பர் ஏ ஹலீம்


அரசியல் வாதிகளின் கடந்த கால வரலாறுகளை பார்க்கும் போது றிசாட் பதியுதீனுக்கு எதிராக மாத்திரம் திட்டமிட்டு  ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந் நிலைமைகள்  மனச்சாட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகவும் மன வேதனை அளிக்கும் கசப்பான பழிவாங்கும்  நடவடிக்கைகளாகவே நான் பார்க்கின்றேன் என கிண்ணியா நகர சபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூதூர் தொகுதி கொள்கைபரப்புச் செயலாளருமான எம்.எம்.மஹ்தி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

நாட்டின் இறைமை மற்றும் சட்ட திட்டங்களுக்கு எப்போதும்  மதிப்பளித்து அனைத்து விசாரணைகளுக்கும் மறுக்காது,  ஒளிந்திராது பூரண  ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டிருந்த அவரை வேண்டுமென்று சிறைப்படுத்தி தடுத்து வைத்திருப்பது மன வேதனை அளிக்கின்றது.

அவர் சார்ந்த கட்சி ஆதரவாளர்களாலும்  நடுநிலையாக சிந்திக்கும் நடுநிலை வாதிகளாலும் ஒப்பிட்டுப்  பார்க்கும் போது இவருக்கு மாத்திரம் வழங்கப்படும் இந்த தண்டனைகள் அநியாயமானதாகவே பார்க்கப் படுகின்றது.

நம் நாட்டின் இறைமை மற்றும் சட்ட திட்டங்களை பாதுகாப்பதோடு நீதியான ஆட்சியை நிலை நாட்ட பொறுப்பளிக்கப் பட்டிருக்கும்  அரசுக்கும் அவற்றை நடைமுறைப் படுத்தும் அதிகாரிகளுக்கும்  இவர் விடயத்தில் மன சாட்சி நிச்சயமாக உறுத்தாமல் இருக்காது. 

நிச்சயமாக அநீதிக்குள்ளானவர்களின் பிரார்த்தனைகள் இறைவனால்  ஏற்றுக்கொள்ளப் படும் என நம்பிக்கை வைத்திருக்கும் நாங்கள் கேட்கிறோம். அவருக்காக பிரார்த்திக்கிறோம். அநீதி இழைத்தோரை இறை தண்டனை விட்டு வைக்கப்போவதில்லை. நீதி மன்றில் உங்கள் விவாதம் வெல்லலாம். ஆனால் உங்கள் மனசாட்சி பேசிக்கொண்டே இருக்கும். 

 எனவே அனைத்து விசாரணைகளையும் நீதியாகவும், நியாயமாகவும் செய்யுங்கள். நீதியானதும் நடுநிலையானதுமான விசாரணையின் பின்னர் குற்றமமானது  நிரூபிக்கப் பட்டால் அதன் பின்னர் நிச்சயமாக தண்டனை வழங்குங்கள். அதை நாங்களும் ஏற்றுக்கொள்வோம். அது வரை அவரை சிறைப்படுத்தி வைத்திருக்காமல் விடுதலை செய்யுங்கள் என அரசிடம் பணிவாக கேட்டுக்கொள்கிறேன்.