அடக்கம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பில் இவ்வாரம் இறுதி முடிவு

 




 ( மினுவாங்கொடை நிருபர் )


   கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில், சுகாதார அமைச்சர் இவ்வாரம் தீர்க்கமான முடிவு எடுக்க இருப்பதாக அறிய வருகிறது.

   கொவிட் - 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக, கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இதனை சிலர் மறுத்ததோடு, சிலர் சரியென்று குறிப்பிட்டனர்.

   கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்ரி அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
இதன்போது, அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர்களான மஹிந்த அமரவீர, சமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்திருந்த  அதேவேளை, அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என விமல் வீரவங்ச, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமேஷ் பத்திரண போன்றோர் குறிப்பிட்டிருந்தனர்.

   இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, கொரோனா மரணங்களை அடக்கம் செய்வது  தொடர்பில் அமைச்சரவையில் கருத்து பரிமாறப்பட்டது. இது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் குழுவுடன் கலந்துரையாடி முடிவு எடுக்குமாறும் எனக்கு அறிவிக்கப்பட்டது.

   இதனுடன் தொடர்புள்ள தொழில்நுட்பக் குழுவின் சில அறிக்கைகள் எனக்குக் கிடைக்க வேண்டியுள்ளது. அந்தப் பரிந்துரைகள் கிடைத்ததும், இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

   கொவிட் - 19 வைரஸினால் மரணிக்கும் நபர்களின் சடலங்கள் தொடர்பில் ஆராயும் நிபுணர் குழுவின் அறிக்கைகள், எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளதாக, அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன.

    அவை கிடைத்ததும், இவ்வாரம் சுகாதார அமைச்சர் இது தொடர்பிலான  தனது இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

   அமைச்சர் அலி சப்ரியின் வேண்டுகோளுக்கு அமைய, நிபுணர் குழு இரு வாரங்களுக்கு முன் கூடி அடக்கம் செய்வதற்கு  அனுமதி வழங்குவது தொடர்பாக மீளாய்வு செய்தது. இதன்போது எந்த முடிவும் எட்டப்படாதது குறிப்பிடத்தக்கது. 

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்