ஜனாஸா எரிப்பு விவகாரத்தை அரசை விஞ்சிய ஒரு சக்தி ஆட்டுவிக்கின்றதா? என்ற சந்தேகமும் எழுகிறது
 நூருல் ஹுதா உமர்பல்லாயிரக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் உள்ள இந்தியாவில் கூட இலங்கை ஜனாஸா எரிப்பு விடயத்தினை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. ஆனால் நமது நாட்டிலோ விடயம் இன்றோ நாளையோ சரி வரலாம் என்ற போர்வையில் கதையாடல்கள் மாத்திரம் சொல்லப்பட்டு முஸ்லிம் சிவில் சமூகங்களினதும் போராட்ட குணம் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. ஆகவேதான் அரசாங்கம் ஜனாஸா எரிப்பு விடையத்திலும் வெற்றி கண்டு, சமூக ஊடகங்களில் போராடிய போராட்டங்களையும் வெற்றி கண்டு, இறுதியில் அதனை பேசிய மற்றும் எதிர்த்த சக்திகளையும் பேசவிடாமல் பூச்சியமாக்கி, முஸ்லிங்களை வைத்தே எமது பேச்சு சுதந்திரத்தையும் பறித்து ஹெட்றிக் வெற்றி கண்டுள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அண்மைய காலங்களில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியிருக்கும் கோவிட் தொற்றுக்கு இல்லாகிய முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிப்பு விவகாரம் தொடர்பில் இன்று சனிக்கிழமை தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், கோவிட்-19 தொற்று காரணமாக மரணமடைந்த முஸ்லிம்களின்  ஜனாஸாக்கள்  சர்வதேசத்தில் எங்குமில்லாதவாறு அரசின் அனுசரணையோடு இலங்கையில் மாத்திரம் தீயிலிடப்பட்டன. கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினுடைய தாக்கம் கடுமையாக உருவாக, ஜனாஸா எரிப்பு விவகாரம் சூடுபிடித்து எந்தவிதமான சக்திகளின் தூண்டுதலும் இன்றி இயற்கையாகவே சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான எதிர்ப்பலை உருவாகியது. முஸ்லிம் சிவில் சமூகங்களும் இது தொடர்பில் பேச ஆரம்பித்தன.

எதிர்ப்பை நுணுக்கமாக அணுகிய அரசு  முஸ்லிங்களை வைத்தே அதனை  தகர்த்தெறிந்தது. நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்கள் மூலமாக அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்வதாக கூறி, எமக்கு நாமே கைவிலங்கிட்டுக்கொண்டோம்.  இது தொடர்பில் எதுவுமே பேசாமல் அமைதியாக முஸ்லிம் சமூகம் இருக்க வேண்டும் என்று பரவலாக கேட்கப்பட்டு ஊடகங்களில் தோன்றிய எதிர்ப்பலைக்கும் பூட்டு போடப்பட்டது.

ஜனாஸா எரிப்பை ஆரம்பித்த அதே அரசு அதனை நிறுத்தி முஸ்லிம்களுக்கு நல்லது செய்வது போன்ற ஒரு நாடகம் அரங்கேறியது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி கூட எதிர்க்காத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச "முஸ்லிம்களின் மார்க்க விடையதானங்களின் படி ஜனாஸாக்களை அடக்க கொடுக்க வேண்டும்"  எனக் கூறியும், ஜனாஸா எரிப்பு விடயத்தை எதிர்க்க எவரும் இல்லாத சூழ்நிலையிலும் ஜனாஸாக்கள் எரிகின்றதென்றால் இதற்கு அரசே பொறுப்புக் கூற வேண்டும்.

 20ன் பின்னர் சர்வ வல்லமையும் பொருந்திய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தன் வாய்மொழியால் வருவதெல்லாம் சுற்றுநிருபம் என்று கூறுகின்ற நாட்டில் ஜனாஸா எரிப்பை நிறுத்துவது என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு விடயமாகவே இருக்கப்போவதில்லை.

ஆனாலும் ஜனாஸா எரிப்பு தொடர்கிறது. இவற்றை வைத்துப் பார்க்கின்றபோது ஜனாஸா எரிப்பு விவகாரத்தை அரசை விஞ்சிய ஒரு சக்தி ஆட்டுவிக்கின்றதா? என்ற சந்தேகமும் எழுகிறது. நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களுக்கு கூட எரிப்பு விவகாரம் முடிவுக்கு வருமா? எரிப்பை நிறுத்தும் வர்த்தமானி வெளியிடப்படுமா?  என்ற சந்தேகத்தின் வெளிப்பாடே அவர் பாராளுமன்றத்தில் " வைத்திய நிபுணர் குழுவை போட்டு நாங்கள் நியாயம் கேட்டிருக்கின்றோம் " என்று கூறிய விடையமாகும் என்றார்