கொரோனா மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பரவாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை - அரச மருத்து அதிகாரிகள் சங்கம்




 ( மினுவாங்கொடை நிருபர் )


   கொரோனா வைரஸ் மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குப் பரவாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
   மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொரோனா வைரஸ் நோயாளிகளின் கண்காணிப்புத் தரவுகளை வழங்காவிட்டால், மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
   மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் கண்காணிப்புத் தரவுகளைத் தாமதமின்றி சேகரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், மேல் மாகாணம் தொடர்ந்தும் அதிக ஆபத்தான பகுதியாகக் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
   மேல் மாகாணம் குறித்து மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அத்துடன்,  தாமதமின்றி முடிவுகளை எடுக்க வேண்டும்.
 நோயாளர்களின் வயது, முகவரி,  பெயர் போன்ற விபரங்கள் மாத்திரமில்லாமல் அவர்களின் முழுமையான தகவல்களைப் பெறவேண்டும்.
   அத்துடன், இதுவரையில், மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எந்தத் தரவுகளையும் வழங்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )