முல்லையில் கொரேனா பரவலைத் தடுக்க, சன நெருக்கத்தை கட்டுப்படுத்த திட்டம்
 விஜயரத்தினம் சரவணன்


முல்லைத்தீவு மவட்டத்தில் கடந்த 30.10.2020 அன்றையநாள் இரண்டு கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, கொரானாத் தொற்றுப் பரவலைத் தடுக்கும்நோக்கில் மக்கள் நெருக்கமாக சென்று வருகின்ற இடங்களில் சனநெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டசெலர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தொற்று ஏற்படாதவாறு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனையில் 31.10.2020 அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்தகாலத்தில் எமது மாவட்டத்தில் எவ்வித தொற்றாளர்களும் இனங்காணப்பட்டிருக்கவில்லை. தற்போது இரண்டுபேர் தொற்றுக்களுடன் இனங்காணப்பட்டிருப்பதன் காரணத்தினால் மக்கள் அச்சத்துடன் காணப்படுவதாகஅறிகின்றோம்.

அச்சம் என்பது ஒருபுறமிருக்க, தொற்றுக்கள் பரவாமல் இருக்க மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.

குறிப்பாக தேவைகள் இன்றி வீதிக்கும் வெளி இடங்களுக்கு வருவதையும் தவிர்கவேண்டும். திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட இவ்வாறான அனாவசியமான வைபவங்களை மட்டுப்படுத்தி குறைந்த அளவில் உரியவர்கள் மித்திரம் அந்த வைபவங்களைச் செய்தால் பொருத்தமாக இருக்கும்.

அதேபோல் அனைத்து மத வணக்கத்தலங்களிலும் மக்கள் அதிகளவாக செறிந்து செல்வதை தடுக்குமாறு போலீசார் மற்றும் பொதுசசுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதை மீறி செயற்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போன்று சந்தைபோன்ற மக்கள் நெருக்கமாக காணப்படுகின்ற இடங்களில், நெருக்கங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சந்தைகளை அடைபட்ட அறைக்குள் இல்லாமல் திறந்த அரங்கில், அல்லது வீதி ஓரங்களில் சந்தைகளை நடாத்தும்போது சன நெரிசல்களைக்கட்டுப்படுத்துவதாக அமையும். இது தொடர்பில் உதவி உள்ளூராட்சி ஆணையாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை போலீஸாரும், பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இதுதொடர்பில் மக்களுக்கு ஒலிபெருக்கிகளில் அறிவித்தல்களை வழங்குவார்கள்.

எனவே தொற்றுக்களைக்குறைக்கும் வகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினைப் பேணுதல், சவர்க்காரம் அல்லது தொற்றுநீக்கிகளால் கைகளை நன்கு கழுவுதல், தம்மும்போதும் இருமும்போதும் கைகளை மடித்துத் தும்முதல் அல்லது கைக்குட்டையை பயன்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் மாவட்டத்தினையும், பிரதேசத்தினையும், உங்களுடைய ஒவ்வொருவரினதும் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறும் மக்களை வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.