நாட்டின் அனர்த்த நிலை 3 ஆவது கட்ட நிலையில் - ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படாத பிரதேசங்களுக்கு விசேட ஆலோசனை

 

 மினுவாங்கொடை நிருபர் )


   நாட்டில் நிலவும் கொவிட்-19 தொற்று நிலைமை தொடர்பான எச்சரிக்கை நிலை 3 ஆவது கட்ட அனர்த்தம் Alert Level என்று கருதப்படுவதாகவும், கொவிட்-19 நிலைமை அடிக்கடி மாற்றத்திற்குள்ளாகும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
   இதற்கமைவாக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படாத பிரதேசங்களில் உள்ளக வைபவங்கள், திறந்த வெளி வைபவங்கள், பொதுமக்கள் கூட்டம், களியாட்டம், இசை நிகழ்ச்சி மற்றும் கரையோர நடைபவனி ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
   பாடசாலை, பல்கலைக்கழகம், உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களைப் போன்று, தனியார் மேலதிக வகுப்புக்கள், திரையரங்குகள், சிறுவர் பூங்கா, மிருகக்காட்சிசாலைகள், நீச்சல் தடாகம், கசினோ, இரவு நேர விடுதிகள்,  கடற்கரை விருந்துபசாரம் ஆகியவற்றுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படாத பிரதேசங்களில், நடவடிக்கைகள் வரையறுக்கப்படும் முறை தொடர்பான வழிகாட்டிகளை வெளியிட்டே சுகாதார அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
   இதற்கு மேலதிகமாக, வீடுகளில் இருந்து வெளியேறுதல், பொதுப் போக்குவரத்து, அரச நிறுவனங்கள், அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், வங்கி, பொருளாதார மத்திய நிலையங்கள், உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்கள், நீதிமன்றங்கள்  மற்றும் சிறைச்சாலை நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பிலும் வழிகாட்டி ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   அத்தியாவசிய வேலைகளுக்காக அல்லது அனுமதி பெற்ற வேலைகளில் ஈடுபட வேண்டுமாயின், வீட்டில் இருந்து 2 பேர் மாத்திரமே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
   பஸ்கள், ரயில்களில் 75 சதவீத ஆசனங்களில் மாத்திரம் பயணிகள் பயணிப்பதற்கு அனுமதி உண்டு. வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் பொழுது, பயணிகள் இருவர் மட்டுமே பயணிக்க முடியும்.
கார் மற்றும் முச்சக்கர வண்டி தவிர்ந்த ஏனைய வாகனங்களில், ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் மாத்திரமே பயணிக்க முடியும். அத்தியவசிய சேவையை வழங்கும் நிறுவனங்களில் வரையறுக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையில் செயற்பட வேண்டும்.
   ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட கைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தங்குமிட வசதி, போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டும். இது தொடர்பான மேலதிக ஆலோசனைகளை, சுகாதார அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
அங்காடி, வர்த்தக நிலையங்கள், கடைத் தொகுதிகள் ஆகியவை, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும். 
   இது தொடர்பான ஏனைய விபரங்கள், சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அடிப்படைச் சட்ட விதிகள் அவசியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்