அக்கரைப்பற்று பிரதேச சபையின் 2021 வரவு செலவுத்திட்டத்தின் கீழ் மின்குமிழ் பொருத்துவதற்காக 2.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது


 


நூருல் ஹுதா உமர்


அக்கரைப்பற்று பிரதேச சபை பிரதேசங்கள் பூராகவும் ஒட்டுமொத்தமாக மின்குமிழ் பொருத்தப்பட்டு நகரங்களுக்கு ஒத்ததான ஒரு பிராந்தியமாக இன்னும் ஒரு சில மாதங்களின் பின் அக்கரைப்பற்று பிரதேசம் ஜொலிக்கும். அதன் பின்னர் மக்களுக்கு வசந்த காலம் பிறக்கும் என அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம் .ஐய்யுப் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

அக்கரைப்பற்று பிரதேச சபையானது தேசிய காங்கிரசின் தலைவரும் அப்போதைய மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் ஐந்து கிராமங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புதிய சபை. அதன் உருவாக்கம் முதல் இரண்டாவது தடவையாகவும் தேசிய காங்கிரஸ் தான் எங்களின் பிரதேச சபையை ஆட்சி செய்கின்றது.

ஆனால் இந்த பிராந்தியம் நகரங்களுக்கு ஒத்ததாக மாற்றமடைய வேண்டும் என்பதற்காக அதிகளவான வேலைத்திட்டங்களை ஆளும் தரப்பு எங்களின் பிரதேச சபைக்கு செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பெரிய மின் குமிழ்களை பிரதான வீதிகளில் அழகுபடுத்தி உள்ளோம் ஆனாலும்  உள்ளக வீதிகள் மற்றும் வயல் சார்ந்த வீதிகள் என பல வீதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் 2021 வரவு செலவுத்திட்டத்தின் பெரிய மின்குமிழ் பொருத்துவதற்காக 2.5 மில்லியன் நிதியை அதனூடாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நமது பிராந்தியமும் ஒட்டுமொத்தமாக மின்குமிழ் பொருத்தப்பட்டு நகரங்களுக்கு ஒத்ததான ஒரு பிராந்தியமாக இன்னும் ஒரு சில மாதங்களின் பின் ஜொலிக்கும். அதன் பின்னர் மக்களுக்கு இனி வசந்த காலம் தான்.

அதனடிப்படையில் எனது வட்டாரம் இசங்கணிச்சீமை பிராந்தியத்தில் வரவு செலவுத் திட்டத்தில் எனது முன்மொழிவாக இசங்கணிச்சீமை பிராந்தியத்தில் 100 பெரிய மின் குமிழ்களை பொருத்துவதற்காக கோரியிருந்தேன் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இறைவனின் உதவியுடன் எதிர்வருகின்ற நாட்களில் நமது பிராந்தியம் ஒளி மயமாக காட்சி அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறன்றது.- என்றார்