EASTER ATTACK இன்றுவரையிலும் சந்தேகமே

 


இலங்கையை பீதியடையச் செய்து இன்றுவரையிலும் அதிரவைத்துக்கொண்டிருக்கும் விடயமே கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்கள். இந்த தாக்குதல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பின் ஊடாகவே திட்டமிடப்பட்டது என்றே கூறப்பட்டு வருகின்றது என்றாலும் இதில் இன்றுவரையிலும் சந்தேகமே.

தாக்குதல்களின் பின்னர் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இலாபங்களுக்காக பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். நடந்த சம்பவத்தை தத்தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கான செயற்பாடுகளாக இவை நோக்கப்பட்டாலும், அரசியல்வாதிகளின் முன்னுக்குபின் முரண்பட்ட கருத்துகளால் ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் அரசியல் இலாபங்களுக்காக நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களையே வலுவடையச் செய்கின்றன.

தயாசிறி ஜயசேகரவின் சந்தேகம்
ஏற்கனவே “இலங்கைத் தாக்குதல்களுக்கும் ஐ.எஸ் அமைப்பிற்கும் நேரடித் தொடர்புகள் இருக்கின்றது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” எனக் கூறி சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டவரே நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர.
இவர் நேற்று, ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியம் அளித்திருந்தார். இந்த சாட்சியத்தின்போதும் அவர் மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறியது “என்னால் வெளிப்படையாக இப்போது கூற முடியாது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடு ஒன்றினது தொடர்பு உண்டு என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இது தொடர்பிலான தகவல்களை சேகரித்துக் கொண்டு தான் இருக்கின்றறேன். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் நடு நிலையோடு இதனை விசாரணை செய்ய வேண்டும். இலங்கையில் உள்ள அடிப்படைவாத இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்தே பணம் வந்தது. தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்தவர்கள் யார்? என்ற பல உண்மைகளை கண்டறிய வேண்டும்” என்பதே.
தயாசிறியின் இந்தக் கருத்துகள் அரசியல் ரீதியான கருத்துகள் என்ற ஒற்றைக் கோணத்தில் மாத்திரம் கணித்து விட முடியாது. இலங்கை அரசியல்வாதிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்கள் தான் ஆனாலும் தயாசிறி வெளிப்படையாகவே இதனை அழுத்திக் கூறுகின்றார். “தற்போது இந்த தாக்குதல் தொடர்பிலான உண்மைத் தன்மைகளை வெளிப்படுத்தினால், நான் சி.ஐ.டியினரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்லப்படலாம்” என்ற ஓர் தகவலையும் தயாசிறி இங்கு பதிவு செய்திருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இந்தக் கருத்துகளினால் ஏற்படும் சந்தேகங்கள்
எவ்வாறாயினும் தயாசிறியை விசாரணை செய்த அல்லது அவரிடம் இருந்து சாட்சியம் பெற்றுக் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு மிகச் சரியான முறையில் அவரிடம் சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டதா என்பது கேள்விக்குறியது. ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல்களில் சந்தேகம் என தயாசிறி கூறும் போது அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பீல்ட் மார்ஷல் தெரிவுக்குழு சார்பில் “ஒட்டு மொத்த நாடுமே இந்தத் தாக்குதல் ஐ.எஸ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது என ஏற்றுக்கொண்டது. பொலிஸ் உட்பட புலனாய்வு பிரிவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் உங்கள் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது” என தயாசிறியிடம் கேள்வி எழுப்புகின்றார்.

அதற்கு “விசாரணை முடிவுகள் அனைத்தும் தற்போது வரையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தை மாத்திரமே முன்வைத்துள்ளது. அவர்கள் தான் மேற்கொண்டார்கள் என்று எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. உங்களுக்கு முடியுமாயின் அவ்வாறான விடயத்தினை நிரூபியுங்கள்” என தயாசிறி பதில் வழங்குகின்றார். எனினும் இதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைதியாகவே இருக்கின்றது. ஆக நாடாளுமன்ற தெரிவுக்குழு வெறும் கண்துடைப்பு விடயமாகவே நோக்கப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின்னால் எந்த வெளிநாடு உள்ளது?
அதேபோன்று ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின்னால் எந்த வெளிநாடு உள்ளது? என்ற விசாரணைகள் அவசியம். முக்கியமாக இலங்கையில் இயங்கிய அடிப்படைவாத இயக்கத்திற்கு கோடி கோடியிலான பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இவ்வாறு எங்கிருந்து பணம் வந்தது என இது வரையிலும் கூறப்படவில்லை.

இந்த விடயத்தினை முழுமையாக ஆராயும் போது எந்த வெளிநாட்டு சக்தியும் இதன் பின்னால் இருக்கின்றதா அல்லது இல்லையா என்ற உண்மைத்தன்மை வெளிப்பட்டு விடும். ஆனால் தாக்குதல்கள் நடந்து இரு மாதங்களின் பின்னரும் கூட இந்த விடயம் தொடர்பிலான எந்த தகவல்களும் வெயிப்படுத்தப்படவில்லை. மாறாக தேர்தல் தொடர்பிலான பிரச்சாரங்களே தற்போதும் அதிகரித்துள்ளன. அப்படியே வெளிநாட்டு தொடர்புகள் இல்லை என்றாலும் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட பணம், ஆயுதம் எங்கிருந்து கிடைக்கப்பெற்றது என்ற உண்மையாவது வெளிப்படுத்தப்படல் வேண்டும் ஆனால் அதுவும் வெளிப்படுமா என்பது சந்தேகமே.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு என்பது போலியா?
இலங்கை தாக்குதல்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் நேரடித் தொடர்புகள் இல்லை என்ற கருத்துகளே தற்போது அதிகரித்து வருகின்றன. இத் தாக்குதல்களுக்கு ஐ. எஸ்.ஐ.எஸ் தான் காரணம் என்பதற்கான வலுவான ஆதாரமாக அந்த இயக்கத்தின் தலைவர் அபூபக்கரின் காணொளி எடுத்துக்காட்டப்பட்டது, எனினும் இந்தக் காணொளி ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னிணைப்பாகவே இலங்கை தாக்குதல் தொடர்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

“IS வசமிருந்த கோட்டைகளை அது இழக்க நேரிட்டதற்கு பலிவாங்கவே ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன” என்பது IS கூறும் காரணம். ஆனால் முதலாவதாக அமோக் மூலம் தாக்குதல்களை பொறுப்பேற்றபோது ஏன் இந்த காரணத்தை கூறவில்லை? என்பது இந்த விடயத்தில் உள்ள முக்கிய சந்தேகமாகும். அதேபோன்று இலங்கையில் தாக்குதல் மேற்கொண்டது ஓர் சுயாதீன அமைப்பு என்பதை அபூபக்கர் சுட்டிக்காட்ட விரும்புகின்றார் என்பது அக்காணொளி மூலம் தெளிவாகின்றது.
இவ்வாறான நிலையில்தான் “இலங்கையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட விடயம் இரண்டு நாட்களுக்கு பின்னரே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு தெரியவந்தது. தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் இருந்த முக்கியப்புள்ளி ஒருவர் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இத் தாக்குதல்களை பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், அதன் பின்னரே இத் தாக்குதல்கள் தொடர்பில் அந்த அமைப்பு வெளிப்படுத்தியதாகவும்” இந்தியாவின் முக்கிய ஊடகம் ஒன்று வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது. (இந்த விடயம் நாடாளுமன்ற தெரிவிக்குழுவிலும் பேசப்பட்டது).

மேற்குறித்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் காணொளிச் சந்தேகத்திற்கும், இந்த இலங்கையின் அழுத்தம் தொடர்பிலான விடயத்திற்கும் தொடர்புகள் இருக்கலாமா என்ற சந்தேகத்தை இந்த விடயம் மேலும் வலுப்படுத்துகின்றது என்றும் கூற முடியும்.

அதேபோன்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் நேரடித் தொடர்பில் உள்ளதாக கூறப்படும் ஜிஹாதிகள் அல்லது அடிப்படைவாத இயக்க உறுப்பினர்கள் தொடர்பிலான முறையான ஆதாரங்கள் புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெறவில்லை என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
எவ்வாறாயிலும் இந்த விடயத்தில் அரசியல் அழுத்தங்கள் அற்ற நீதியான விசாரணைகள் மட்டுமே எதிர்காலத்தில் இலங்கையில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுவதனைத் தடுக்கும் என்பது மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தாகும்.

அரசியலுக்காக இனவாதம்
இந்த விசாரணைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் போது தான் மறுபக்கம் இனவாதம் என்பதும் வளர்க்கப்படுகின்றது. ஞானசாரர தேரர் உட்பட பலரும் இணைந்து ஈஸ்டர் தினத்தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்களே என்ற வகையிலான கருத்துத் திணிப்பை நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அரசாங்கத்தினால் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியாது எனவே இதனை தம்மிடம் ஒப்படைக்குமாறும், பயங்கரவாத சுத்திகரிப்பை தாம் மேற்கொள்வதாகவும் ஞானசார தேரர், உட்பட பல பிக்குமார்களும் தெரிவித்து வருகின்றனர். யார் குற்றவாளி என்பதனை தீர்மானிக்கும் பொறுப்பும் தகுதியும் நீதித்துறைக்கு மாத்திரமே உண்டு எனினும் பிக்குகள் அப்பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றனர். பகிரங்க இனவாதத்தினை கக்கி வருகின்றனர்.

இவர்களது முக்கிய கருப்பொருள் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்பது இதற்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை உதாரணமாக முன்வைக்கின்றனர்.

எனினும் இவர்களது இனவாதப் பரப்புரைகளை அரசாங்கமும், அதிகாரத்தில் உள்ளவர்களும் வேடிக்கை பார்த்து கொண்டே இருக்கின்றனர். இந்த விடயமும் கூட அரசியல் இலாபங்களுக்காக குண்டுத்தாக்குதல்கள் என்ற கருத்தையே மையப்படுத்துகின்றன எனவும் கூறப்படுகின்றது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்