வரலாற்று சாதனையாற்றிய விருட்சம் ஒன்று வீழ்ந்தது

 

 அஷ்ஷைக் அஹ்மத் முபாறக் இப்னு முஹம்மத் மஃதூம் ஆலிம் அவர்களின் வாழ்க்கை வரலாறு* 


  *தொகுப்பு: அஷ்-ஷைக் எம்.பர்ஹத் ஹஷீம் (ஹக்கானி)* 

   இலங்கை திருநாட்டின் முஸ்லிம்களின் வரலாற்றில் பலரது சேவைகள் என்றும் அழிக்க முடியாதவை. அந்த அளவிற்கு பலர் இந்நாட்டின் பன்மைத்துவத்திற்கு மத்தியில் பாரிய பணியாற்றி உள்ளார்கள்.
   அந்த வரிசையில் மகத்தான சேவையாற்றிய இலங்கை முஸ்லிம்களின் கல்விச் சொத்தான அன்பிற்குரிய ஆசான் எம்.எம்.ஏ முபாரக் அவர்கள் 27.10.2020 அன்று காலமானார்கள் என்ற செய்தி எம்மைனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
   கடந்த நான்கு ஆண்டுகளாக முபாரக் ஹஸ்ரத் அவர்களோடு நெருங்கி பழகும் சந்தர்ப்பம் கிடைத்ததை பெரும் அருளாக கருதுகின்றேன்.
   ஹஸ்ரத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவர்களிடமே கேட்டு அறிந்தவன் என்ற வகையில்  சுருக்கமாக இக்கட்டுரையில் வரைகிறேன்.

*சிறுபிராயம்* 
முஹம்மத் மஃதூம் ஆலிம் அவர்களுக்கு மகனாக
1949.07.05 ஆம் திகதி மல்வானையில் பிறந்த இவர்கள் மல்வானையிலையே வாழ்ந்தார்கள். தனது ஆரம்பக் கல்வியை மல்வானை அல்முபாறக் அரசினர் கலவன் பாடசாலையில் 8 ஆம் தரம் வரை கற்ற இவர்கள் மார்க்க ஆரம்ப அறிவை தனது தந்தையிடமே கற்றுக் கொண்டார்கள்.  
   பின்னர் மார்க்க அறிவை கற்பதற்காக 1963ஆம் ஆண்டு மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் இணைந்த இவர்கள் 1970ம் ஆண்டு மௌலவி பட்டம் பெற்று வெளியேறினார்கள். ஆரம்பம் முதலே கற்றல் செயற்பாடுகளில் ஆற்றல் மிக்கவராகவும், துணிச்சலான, நற்பண்புகள் கொண்டவராகவும் திகழ்ந்தார்கள்.

 *மேற்படிப்படிப்பிற்கான வெளிநாட்டு பயணம்* 
   1973ம் ஆண்டில் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் பெற்று அங்கு சென்ற இவர்கள் 1978ம் ஆண்டு வரை மேற்படிப்புக்களை அங்கு தொடர்ந்தார்கள். அப்பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான இரண்டாவது மாணவர் என்பது சிறப்பம்சமாகும்.

*மார்கப் பணியில் ஹஸ்ரத்* 
   கலாசாலையில் இருந்து திரும்பிய இவர்கள்
பண்டாரவளை ஜுமுஆ மஸ்ஜிதில் 1 1/2 வருடம் இமாமாக கடமை புரிந்த அதேநேரம் அரசாங்க பாடசாலைகளான திஹாரிய தாருஸ்ஸலாம் வித்தியாலயம், மினுவாங்கொடை - கல்லொழுவை முஸ்லிம் வித்தியாலயம் போன்றவற்றில் 1973 ஆம் ஆண்டு வரை ஆசிரியராகவும் பணியாற்றினார்கள்.
   மதீனாவில் இருந்து தாயகம் திரும்பிய இவர்கள் 1981ஆம் ஆண்டு வரை பேருவளை ஜாமிஆ நளிமிய்யாவில் வாரத்தில் மூன்று தினங்கள் ஆசிரியராகவும் ஏனைய தினங்களில் தான் கற்றுத் தேர்ந்த கபூரியாவில் ஆசிரியராகவும் கடமையாற்றினார்கள்.

1997ம் ஆண்டு வரை தொடராகவே கொழும்பு கோட்டை, வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களில் குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தி வந்தார்கள்.

 *கபூரியாவின் அதிபராக* 
தான் கற்ற கலாசாலையில் பகுதி நேர ஆசியராக பணியாற்றிய ஹஸ்ரத் அவர்கள் பலரின் வேண்டுகோளின் பெயரில் 1981ஆம் ஆண்டு மஹரகம கபூரிய்யாவின் அதிபராக கடமையேற்றார்கள்.
 தான்அதிபராக,ஆசானாக இருந்த நாட்களில் ஒரு போதும் மாணவர்களை தகாத வார்த்தைகளால் அழைத்ததோ அல்லது வீணாக தண்டித்தோ கண்டித்தோ இல்லை.அவர்கள் பெற்றோரை விட்டு வந்திருக்கிறார்கள் அன்பால் அரவணைக்க முடியும் என அடிக்கடி கூறுவார்கள். இவரது அதிபர் பணி 1997 வரை சுமார் 16 வருடங்கள் நீடித்தது.

 *பேணுதலான வாழ்க்கை* 
மார்க்க விடயங்களில் விட்டுக் கொடுக்காத இவர்கள் நபியவர்களின் சுன்னாக்களுக்கு எதிராக செயற்படுவதை அனுமதிக்கவே மாட்டார்கள்.ஐந்து நேர தொழுகையிலும், முன்,பின் சுன்னத்தான தொழுகைகளிலும் பேணுலதாக இருந்ததை போன்று தஹஜ்ஜத் தொழுகை விடயத்தில் மிகவும் அக்கறை செலுத்தி வந்தார்கள். இது தான் நோய்வாய்ப்பட்ட காலத்திலும் கூட தொடர்ந்தது.

 *பண்பின் சிகரமாக ஹஸ்ரத்* 
அனைவருடனும் அன்பாக பழகும் சுபாவம், பேச்சிலே இனிமை, நிதானமான போக்கு, வேறுபாடு பார்க்காத பண்பு, கருத்து வேறுபாடுகளின் போது கையாளும் விதம் என அன்னாரின் பண்புகளை அடிக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் அன்னாரின் ஆளுமைக்கு மெருகூட்டிய அம்சங்கள் என்றால் மிகையாகாது.

 *ஜம்இய்யாவில் ஹஸ்ரத் அவர்கள்* 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவில் 1979 ஆம் ஆண்டு ஒரு உறுப்பினராக சேர்ந்து 1979ம் ஆண்டுப் பகுதியில் பத்வாக்குழு செயலாளராகவும் பின்னர் 1995-2003வரை ஜம்இய்யாவின் தலைவராகவும், 2003-2010 வரை உப தலைவராகவும் பதவிகளை வகித்த ஹஸ்ரத் அவர்கள் 2010 இலிருந்து 2020 மரணிக்கும் வரை பொதுச் செயலாளராகவும் என சுமார் 40 வருங்களாக கடமையாற்றி வந்தது கோடிட்டு காட்ட வேண்டிய ஒன்றாகும்.

நான் பணிபுரிந்த காலத்தில் ஹஸ்ரத் அவர்கள் வெள்ளி தவிர்ந்த நாட்களில் ஜம்இய்யாவிற்கு வருகை தராமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு ஜம்மியதுல் உலமாவுடன் ஆழமான அன்பை கொண்டிருந்தார்கள்.

இறுதியாக ஹஸ்ரத் அவர்கள் ஜம்இய்யதுல் உலமாவிற்கு வருகை தந்து வீடு திரும்பும் போதே தான் நோய் வாய்ப்பட்டார்கள். அவரை அதிகம் சுகம் விசாரிக்க சென்ற போதெல்லாம் ஜம்இய்யதுல் உலமாவின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொள்வார்கள். அதே நேரம் தான்  அவசரமாக குணமடைந்து ஜம்இய்யாவிற்கு வருவதற்கு பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுவார்கள்.

முபாறக் ஹஸ்ரத் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தற்போதைய தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்களுக்கு பக்க பலமாக இருந்து செயல்பாட்டு வந்தார்கள். வயோதிப வயதிலும் சமூக விடயங்களில் முன்னிற்க தவறவில்லை. 
 
 *சிறந்த எழுத்தாளர்* 
சமூக பிரச்சினைகள் எழும் போது இரவில் விழித்திருந்து கட்டுரைகளை எழுதி மறுநாள் காலையில் ஜம்மியதுல் உலமாவிற்கு வந்து அதனை தட்டச்சு செய்து பிரசுரிக்க வேண்டுவார்கள். பல பத்திரிகையாளர்களுடனூம் நெருக்கம் உடையவர்களாகவே இருந்தார்கள்.

இது தவிர ஹஜ்ஜும் அதன் விதிமுறைகளும் 1983, ஜனாஸாவும் அதன் சட்டங்களும் 1992, இத்தாவும் அதன் விதிமுறைகளும் 1994, பள்ளிவாசல்களின்  சட்டதிட்டங்கள் 2005, காதியானிஸம் 2010, துஆ ஒழுங்குகளும் விதிமுறைகளும் 2013 ஆகிய தலைப்புக்களில் புத்தகங்களை எழுதியுள்ள இவர்கள் பல நூற்களை மொழிபெயர்த்தும் உள்ளார்கள்.

இவருடைய தொகுப்புக்களில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் தடம் பதிக்கும் சரந்தீபு கண்ட சான்றோர்கள் எனும் அரபு மொழியில் இலங்கையில் வாழ்ந்து மரணித்த இருநூற்றுக்கு மேற்பட்ட உலமாக்களின் வரலாற்று தொகுப்பு நூல் மிக முக்கியமானதாகும். இது இன்னும் வெளிவரவில்ல.

இப்புத்தகத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க ஹஸ்ரத் அவர்களுடன் நேரடி தொடர்பை பேணியவன் என்ற வகையில் ஹஸ்ரத் அவர்களின் ஆயிற்காலத்தில் அப்புத்தகம் வெளியிடப்படாததையிட்டு கவலை அடைகிறேன்.

மேலும் இஸ்லாமிய வங்கியியல் தொடர்பான ஆலோசகராகவும் பல இஸ்லாமிய வங்கிகளில் கடமையாற்றி வரும் இவர்கள் மல்வானை மின்பாஸ் பெண்கள் கலாபீட நிருவாகத்தின் கௌரவ தலைவராகவும் செயற்பட்டு வந்தார்கள்.

 உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் மூத்த உலமாக்கள் பலரை சந்தித்திருக்கின்ற இவர்கள் சர்வதேச மாநாடுகள் பலதிலும் கலந்து கொண்டுள்ளார்கள்.

வானொலிகளில் தொடர் நிகழ்ச்சிகளை செய்து வந்த இவர்கள் தன்னை போன்றே தனது பிள்ளைகளையும் சமூகத்தில் சிறந்தவர்களாக மாற்ற தவறவில்லை.   பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி போதித்துள்ள இவர்களின் சிரேஷ்ட மாணவர்களாக அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத், அஷ்-ஷைக் எஸ்.எல் நவ்பர், அஷ்-ஷைக் தாஸிம் போன்றவர்களை குறிப்பிடலாம். 
   ஹஸ்ரத் அவர்கள்  
அல்லாஹுதஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து, ஹித்மத்துக்களை பொறுந்தி உயரிய சுவனத்தை வழங்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.

 

உயர் பண்புகளுடனும்  அர்ப்பணிப்புடனும்  செயற்பட்ட பன்முக ஆளுமை: முபாரக் ஹஸ்ரத்
   உஸ்தாத் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக் ஹஸ்ரத் அவர்கள் மிகப்பெரிய ஒரு ஆளுமையாக திகழ்ந்து இன்று (27.10.2020) வபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்று இரவு அவர்களது ஜனாஸாவில் கலந்து கொண்ட பிறகு அவர்கள் பற்றி எனது உள்ளத்தில் தோன்றிய ஒரு சில விடயங்களை எழுதலாம் என கருதுகிறேன்.
    2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஏழு வருடங்கள் முபாரக் ஹஸ்ரத் அவர்களோடு இணைந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவில் செயலாற்றி வருகின்றேன். இந்த நாட்களில் அவர் ஒரு தந்தையை போல மிகவும் அன்பாக, உயர்ந்த பண்பாடுகளை வெளிப்படுத்திய வண்ணம் என்னோடும் சக ஊழியர்களோடும் சந்தோஷமாக இணைந்து பணியாற்றி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக காணப்பட்டார்.
   அவரோடு சேர்ந்து பணியாற்றிய அந்த பொழுதுகளை நினைக்கும்போது அதன் நினைவுகள் மனதுக்கு கனதியை ஏற்படுத்துகின்றன. தவறுகளை அழகாக சுட்டிக்காட்டி, அதனை நல்ல முறையில் திருத்தித் தரக் கூடியவராகவும் மக்களை மதித்து நடக்க கூடியவராகவும் முபாரக் ஹஸ்ரத் அவர்கள் காணப்பட்டார்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது அவரது தனிச் சிறப்பம்சமாக காணப்பட்டது. அவரது உயர்ந்த பண்புகள் அவரின் பால் மக்களை கவர்ந்தழுத்தன என்றால் அது மிகையாகாது. 
   அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்புகளை தொடராக வழங்கிய அவர், ஜம்இய்யாவின் தலைவராகவும் (1995 - 2003) உப தலைவராகவும் (2003 - 2010) பொதுச் செயலாளராகவும் (2010 - வபாத் ஆகும் வரை) செயலாற்றினார். எவ்வித ஊதியமும் இல்லாமல் இவ்வளவு காலம் செயலாற்றிய அவர்கள், ஆரம்ப காலங்களில் தனது சொந்த செலவில் ஜம்இய்யாவின் பல விடயங்களை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறான ஒரு சில சம்பவங்களை படிப்பினைக்காக என்னுடன் பகிர்ந்துள்ளார். 
   ஒரு முறை (1980 களில்) ஜம்இய்யாவின் முக்கிய  வழக்கொன்றுக்கு சென்றுவிட்டு வழக்கறிஞருக்கு  செலுத்த ஜம்இய்யாவில் பணம் இல்லாத போது தனது மனைவியின் வைத்திய செலவுக்காக வைத்திருந்த பணத்தை வழங்கியுள்ளார். இவ்வசனங்களை எழுதும்போது மனம் நெகிழ்வடைகின்றது. முபாரக் ஹஸ்ரத் மற்றும் ரியால் ஹஸ்ரத் போன்ற ஆளுமைகள் விதையாக தங்களை அர்ப்பணித்ததன் விளைவே விருட்சமாக இருக்கும் இன்றைய ஜம்இய்யா என்பதை அதன் வரலாறு பறைசாற்றுகின்றது.
   முபாரக் ஹஸ்ரத் அவர்களின் சேவைகள் பரந்தளவில் காணப்பட்டன. ஜாமிஆ நளீமிய்யாவில் விரிவுரையாளராகவும் கபூரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராகவும் பல வருடங்கள் செயலாற்றியுள்ள அதேநேரம் பல நூல்களையும் தொடர் வானொலி நிகழ்ச்சிகளையும் வழங்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்துள்ளார். அவர்கள் இறுதியாக எழுதிய "செரந்தீப் கண்ட சான்றோர்கள்" எனும் நூல் மிக விரைவில் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
   முபாரக் ஹஸ்ரத், டாக்டர் சுக்ரி, அபுல் ஹசன் ஹஸ்ரத் போன்ற மிக முக்கிய ஆளுமைகள் முஸ்லீம் சமூகத்தை விட்டு தொடர்ந்து பிரிந்து செல்வது அடுத்த தலைமுறை திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும் என்ற செய்தியை எமக்கு உரத்துச் சொல்கின்றது.
   முபாரக் ஹஸ்ரத் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கும் அதேநேரம் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றேன்.

- அஷ்ஷைக் பார்ஹான் பாரிஸ் ( நளீமி )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்