தன்னை நிரபராதியென வாதாடும் றிசாட் பதியுதீன் ஏன் தலைமறைவாக வேண்டும்?
 ஐ.எல்.எம் நாஸிம்


இன்று (18)  கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி இணைப்பாளர் அஹமட் புர்க்கான் இக் கருத்தினை முன்வைத்தார் .

மேலும் தெரிவிக்கையில்.

தன்னை தானே நிரபராதி என பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும், அடிக்கடி அறிக்கைவிடும் முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் நீதிமன்ற விசாரணைக்கும் முகம் கொடுக்காமல் தலைமறைவாகியிருப்பதானது.
அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற ஏதுவாக அமைகிறது.

முன்னாள் அமைச்சர் றிசாட் அவர்கள் ஒரு தனிநபர் அல்ல மாறாக அவர் ஒரு கட்சியின் தலைவர், எனவே சமகாலத்தில் இந்த விடயத்தில் தனிநபர் சிந்தனையானது அவர் தலைமை வகிக்கும் சமூகத்தை ஒட்டு மொத்தமாக தலைகுணியச் செய்கின்றது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், பெரும்பான்மை சமூகத்தின் பார்வையில் அவர் மாத்திரமல்ல அவருடைய கட்சிக்கு வாக்களித்த மக்களும் இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காத போக்குடையவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் சட்டத்தை மதிக்காதவர்கள் என்ற செயலாகவே பா.உ றிஷாட் பதியுதீன் அவர்கள் சமூகத்தை சிந்திக்காது செயல்படுகின்றாரா? இச்செயலானது முஸ்லிம்களை பிழையான உதாரண படுத்தலுக்கு ஏதுவாக அமையாதா? என்பதை சிந்தித்து முன்னாள் அமைச்சர் றிஷாட் அவர்கள் தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் முன் ஆஜராகி தனது பக்க நியாயங்களை முன்வைக்காமல் இருப்பதென்பதானது அவருடைய சமூகத்தின் அரசியல் தலைவனாக கற்றுக் கொடுக்கும் ஒழுக்கமான செயல்பாடா எனவும் கேள்வி எழுப்பினார்.

மட்டுமல்ல 20 அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தையும் றிஷாட் பா.உ அவர்களின் கைதையும் சம்பத்தப்படுத்தி சிலர் ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் பேசுகின்றார்கள். இது அப்பட்டமானதொரு இட்டுக்கட்டலாகும் இவ்வாறு பேசி முஸ்லிம்களை மேலும் அரசாங்கத்திற்கு எதிரான போக்குடையவர்களாக காட்சிப்படுத்தி சுய அரசியல் இலாபம் அடைய சிலர் முயற்சிக்கின்றார்கள் எனவே முஸ்லிம்களையும் றிசாட் பா.உ அவர்களின் கைது தொடர்பான விடயத்தை சம்பந்தப்படுத்தி கருத்தாடல் செய்வது ஆரோக்கியமான போக்கு அல்ல என்பதை புரிந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.