கொவிட் தொற்றின் காரணமாக சிரமப்படுவோருக்கு, நபிகளாரின் போதனையின் பிரகாரம் கருணை காட்டுவோம்

 
 ( ஐ. ஏ. காதிர் கான் )

 
   கொவிட் தொற்றின் காரணமாக, சிரமங்களில் இருப்போருக்கும் துன்பங்களில் வாடுவோருக்கும், நபியவர்கள் நமக்குக் கற்பித்த அன்பு, பணிவு மற்றும் தர்மம் வழங்கல் மூலமாக கருணை காட்டுவோம்.
   நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, நீதி அமைச்சர் அலி சப்ரி விடுத்துள்ள மீலாத்  வாழ்த்துச்செய்தியிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார். 
   அந்த வாழ்த்துச் செய்தியில், அமைச்சர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
   உலக வாழ் அனைத்து  முஸ்லிம் மக்களும், உலகிற்கு உதித்த உத்தம இறுதித் தூதரான நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாளை, ரபீ உல் - அவ்வல் மாதமாகிய இன்று, அன்னலார் அவர்களை நினைவுபடுத்திக்    கொண்டாடுகின்றனர்.
   நபி முஹம்மது  (ஸல்) அவர்கள், உலகில் உதித்த இறுதி நபியும் ஒரு இறுதித் தூதராக இருந்தாலும், அவர் போதித்த சுன்னா வழிமுறைகளை முஸ்லிம்கள்  கடைபிடித்து வாழ்வது  முக்கியமான ஒன்றாகும்.
   இலங்கை வாழ்  முஸ்லிம்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டிலுள்ள  அனைத்து சமூகங்களுடனும், சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்தனர்.
    உலகில் வேறு எங்கும் காணப்படாத ஒரு தனித்துவமான  அடையாளத்தை இலங்கை  கொண்டுள்ளது. இவ்வாறான இலங்கைக்குள், சமீப காலங்களில் இந்தப் பிணைப்பைச் சேதப்படுத்த ஒரு சில தீவிரவாத சக்திகள் முயற்சித்த போதிலும், இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், தங்கள் நாட்டிற்கும் பிற சமூகங்களுக்கும் தங்கள் அன்பும் ஆதரவும்  எப்போதும் முதலிடத்தில் இருப்பதைக் காட்டியிருப்பது மனதைக் கவரும் வகையில் உள்ளது.
   இலங்கை, தற்சமயம்  முன்னோடியில்லாத மற்றும் சவாலான ஒரு  காலத்தைக் கடந்து வருகிறது.  கொவிட் -19 தொற்று நோய்ப் பரவல், நமது  அன்றாட வாழ்க்கையில் நாம் எடுத்துக் கொண்டவற்றில் பெரும்பகுதியைத் தகர்த்துவிட்டது, மேலும், பலருக்கு சிரமங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 
   இந்நிலையில், நபி முஹம்மது  (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழி முறைகளிலிருந்து நாம்  கற்றுக்கொள்ள வேண்டிய பல படிப்பினைகள்  நிறையவே உள்ளன.  துயரமான  காலங்களில், சக மனிதர்களிடம்  அன்பு, கருணை, பணிவு, தர்மம் மற்றும் சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை நபியவர்கள்  கற்பித்துத் தந்துள்ளார்கள்.    நபிகளாரது  வார்த்தைகள், நமக்கு மிகப் பெரிய நன்மைகளைத் தந்துகொண்டிருக்கின்றது. இந்தப் பாடங்கள் முன்னரைவிட, தற்போது நமக்கு மிக முக்கியமாக உள்ளது.  ஏனெனில், இந்தச் சோதனை மிகுந்த  காலங்களில், மனித குலத்தையும், நம் தேசத்தையும் மேம்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர  வேண்டும்.
    இச் சிறப்புமிக்க, ஆசிர்வதிக்கப்பட்ட மற்றும் அமைதியான  மீலாதுன் நபி, நபி பிறந்த நன்நாளில் எனது அன்பான மீலாத்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்