கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கல்முனை மாநகர பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்

 

 

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ்  அச்சம் காரணமாக   நாளை முதல் (25) பல்வேறு கட்டுப்பாடுகளை  அமுல்படுத்தப்படவுள்ளதாக  கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தெரிவித்தார்.


கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது   தொடர்பிலான அவசர உயர்மட்டக் கூட்டம்  சனிக்கிழமை(24)   முற்பகல்   மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதன் போது கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்    சட்டம் ஒழுங்கை  இறுக்கமாக நிலைநாட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பொது மக்களையும் வர்த்தகர்களையும் அறிவுறுத்தும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
 
அவர் அங்கு தெரிவித்ததாவது

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர வாழ் பொது மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் நடமாடுவதை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.கல்முனை மாநகரில் சந்தைகளில் பொருள் கொள்வனவிற்கு  வருபவர்கள் தங்களது வாகனத்தை தடுத்துக்கொள்ள கல்முனை சந்தாங்கேணி  மைதானத்திலும்   அதேபோல   கல்முனை தேவாலயத்திற்கு முன்னாலுள்ள பிஸ்கால் வளவில் வாகனங்களை நிறுத்தி கொள்ள முடியும். அத்துடன்  கோரானா வைரஸ்  தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  மக்கள் நெருக்கமாக ஒன்றுகூடும் பிரதேசங்களை தவிர்க்கும் வகையில்   கல்முனை பொதுச் சந்தை  தொடர்பில் தற்காலிக கட்டுப்பாடுகளை உருவாக்கி உள்ளோம்.தனியார் கல்வி நிலையங்கள் ,திருமண மண்டபங்கள்  இயங்குவதற்கு தற்காலிக தடை உத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக திண்மக்கழிவு அகற்றும் முறை சுகாதார நடைமுறையுடன் சீராக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனினால்  கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு 50 மேற்பட்ட கையுறைகள்   முதல்வர் அவர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
மேற்படி கலந்துரையாடலில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில்  இடம்பெற்றதுடன்  மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர்   மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும்   கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்