எனது தந்தை ஜே.வி.பியினரால் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார், நான் புலிகளுக்கு உதவினேன்


 

ஒரு இனத்தின் வாக்குக்ளை மட்டும் நம்பி தான் தேர்தலில் இறங்கவில்லை என்றும் அனைத்து இனங்களிலும் தனக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றார் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம குரு வண. அம்பிட்டிய சுமனரத்ன தேரர். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியில் . பேட்டியின் முழு விபரம்.....

கேள்வி: நீங்கள் முதலில் உங்களைப்ற்றி சொல்லுங்கள்.

பதில்:  நான் மட்டக்களப்புக்கு 1993ல் வந்தேன். எறத்தாழ 27 வருடங்கள் கடந்துவிட்டது, நான் வருவதற்கு முன் இங்கு பௌக்த பிக்குகள் எவரும் இருக்கவில்லை. இங்கு வருவதற்கு முன்பு கண்டி-தெல்தெனிய விகாரையில் இருந்தேன். நான் வந்த பிற்பாடே இந்த விகாரையை இவ்வளவு வசதியோடும் அழகாகவும் உருவாக்க முடிந்தது. இவ் விகாரையை இவ்வளவு சிறப்பாகச் செய்வதற்கு எனக்கு உதவியவர்களில் அனேகர் தமிழர்களாவர்.

அதைவிட கூடுதலாக உதவியவர், அந்நாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் மாவட்ட நிதிப் பொறுப்பாளராக இருந்த கௌசல்யனாகும்.  

கேள்வி: அப்படியானால் புலிகள் இயக்கத்துடன் நீங்கள் நெருக்கமாகச் செயற்பட்டீர்களா?

பதில்:  நான் அவர்களோடு மிகவும் இணக்கமாக இருந்தேன். சிங்கள மக்களுக்கு அவர்களால் எதுவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வந்தேன். அப்படி ஏதாவது வந்துவிட்டால் கூட பேசி தீர்த்துவைப்பேன். அதுமட்டுமின்றி புலிகள் இயக்கத்தின் சில போராளிகள் காயமடைந்தால் இரகசியமாக பன்சாலையில் வைத்து வைத்தியம் பார்ப்பேன்.

உதாரணத்திற்கு ஒன்றை கூறுகிறேன். ஒரு தடவை ”புகலவன்” என்னும் புலி உறுப்பினர் போராட்டத்தின்போது, கால் முறிந்து பன்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவருக்கு ஒறுவிலயில் இருக்கும் வைத்தியரை அழைத்துவந்து வைத்தியம் செய்து சுகப்படுத்தி அனுப்பிவைத்தேன்.

கேள்வி: பாதுகாப்புப் படையினர் கண்டு கொள்ளவில்லையா?

பதில்: பாதுகாப்புப் படையினருக்கு நான் புலிகளின் தளமான கொக்கட்டிச்சோலைக்கு சென்று வருவது நன்றாகத் தெரியும். சிங்கள மக்களின் உடமைகளை மீட்பதற்காக நான் அடிக்கடி அவர்களிடம் செல்வது அவர்களுக்குத் தெரியும். என்னைப்போன்ற ஒருவர் பாதுகாப்புப் படையினருக்கு அக்காலத்தில் தேவையாய் இருந்தது. ஆனாலும், சில உயரதிகாரிகள் என்மீது வெறித்தனமான கோபம் வைத்திருந்தார்கள், பலவிடயங்களை என்னிடமிருந்து அறிய முற்பட்டார்கள். எனக்கு தெரிந்தவைகளை மாத்திரம் சொல்வேன். புலிகள் என்னிடம் எல்லாவற்றையும் சொல்ல மாட்டார்கள்,  

கேள்வி: பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக போட்டியிடுகிறீர்கள் இந்தக் குழுவில் ஒரு தமிழரைத்தவிர வேறு எவரும் இடம்பெறவில்லை. ஆனால், உங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் உங்களோடு நெருக்கமான உறவை வைத்திருப்பதாகவும், அவர்கள் உங்களை காப்பாற்றி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். அவர்களில் ஒரு சிலரையாவது அபேட்சகர்களாக நிறுத்தியிருக்கலாம். அது இடம்பெறவில்லை. இது ஒரு குறையாக தமிழ்மக்களால் பார்க்கப்படுகிறது. அது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: ஒரேயொரு தமிழரைச் சேர்த்திருக்கிறோம் எங்களுக்கு கால அவகாசம் இல்லாததால் ஒரு தவறு நடந்துவிட்டது. இவ்விடயத்தில் குறைகாண்பது தவறானது.

கேள்வி: கடந்த வருடம் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் சென்று பிரதேச செயலாளரோடு முரண்பட்டு, குழப்பம் விளைவித்தீர்கள். அக்காலப்பகுதியில் அது பற்றி உங்களுக்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவே?

பதில்: பிரதேச செயலாளர் கௌரியின் காரியாலயத்திற்கு மூன்று தடவைகள் ஒரே விடயத்திற்காக சென்று வந்திருக்கிறேன். அந்தவிடயம் சம்பந்தமாக ஜனாதிபதி அனுப்பிய கடிதத்துக்கு கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமுற்றது உண்மை, அது தவறுதான். ஒரு பௌத்தபிக்கு அவ்வாறு நடந்திருக்கக் கூடாது.

அதை இன்றுதான் வெளிக் கொணர்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நான் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது எனது தகப்பனார் ஜே.வி.பியினரால் கழுத்தறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இதன் பின்னர் நான் அனாதையாகி விகாரையில் வளர்க்கப்பட்டேன். அன்றிலிருந்து தவறுகளையும், தப்புக்களையும் சந்திக்கிறபோது என்னையறியாமல் ஒரு ஆவேசம் ஏற்படுகிறது. அதனை அடக்கி நிதான மடைய வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லாமலில்லை. ஆனால் அதைச் செயற்படுத்த முடியவில்லை. மற்றைய வேளைகளில் என்னிடம் அன்பு, மரியாதை. பொறுமை, சகிப்பத் தன்மை என்பன நிறைந்து காணப்படுகிறது.  

கேள்வி:  மட்டக்களப்பு மாவட்ட சிங்கள மக்களின் வாக்குகள், இந்த நாட்டின் முன்னிலை வகிக்கின்ற சிங்கள கட்சிகளுக்கு போய்ச் சேரக் கூடாதென்ற நோக்கில், ஒரு சுயேச்சைக்குழுவை உங்கள் தலைமையில் அமைத்து போட்டியிடுகின்றீர்கள் என மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. இதுபற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: இப்படி மக்கள் நினைக்கலாம், மக்கள் நினைப்பதை நாங்கள் தடுக்க முடியாது. இவ்வளவு காலமும் எமது மக்களான தமிழர்களும், சிங்களவர்களும் சேர்ந்து யார்யாருக்கோ வாக்குபோட்டார்கள். பிரச்சினை தீர்ந்ததா? நாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் மிகவும் வசதியாக இருக்கிறார்கள், வீடு கட்டியிருக்கிறார்கள், வாகனம் வாங்கியிருக்கிறார்கள், தங்களது பிள்ளைகளை படிப்பித்திருக்கிறார்கள். நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் வீடு தேவையில்லை, கார் தேவையில்லை, எனக்கு பிள்ளைகளே இவ்லை. நான் மக்களுக்கு மனதார சேவைசெய்வேன். முன்னணிக் கட்சிகளுக்கு வாக்குகள் சேரக் கூடாது என்ற எண்ணம் இல்லை.