மானுடம் போற்றும் முஹம்மத் நபி !

 

 


  • ஜெ. ஹயா

முழு உலகிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களின் தலைவரான முஹம்மத் நபியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை இன்று (30.10.2020) நினைவு கூருகின்றனர். கி.பி. 570 இல் அரேபியாவில் மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபியவர்கள் தனது ஆறாவது வயதிலேயே தாயையும், தந்தையையும் இழந்தார்.

மனித சமூகத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில் இறைவனால் தெரிவு செய்யப்பட்ட நபிமார்களின் வரிசையில் இப்ராஹீம், மூஸா (மோசஸ்), ஈஸா (இயேசு)  போன்ற நபிமார்களுக்கு பின் இறுதியாக தெரிவு செய்யப்பட்டவர் நபி முஹம்மத் அவர்கள் ஆவார்கள்.

சிறு வயதில் ஆடு மேய்ப்பாளராகவும் இள வயதில் வணிகராகவும் தொழில் புரிந்த முஹம்மத் நபி அவர்கள்  “மிகுந்த விசுவாசத்திற்குரியவர்”, “உண்மையாளர்” என்ற நன் மதிப்பை மக்காவாசிகளிடம்  பெற்றிருந்தார்.

இளைஞன் முஹம்மத் தன் ஓய்வு நேரங்களில் தனிமையாக ஹிரா என்ற குகையில் ஒதுங்கி மக்கா சமூகத்தை பற்றி சிந்திப்பதிலேயே அதிக நேரத்தை செலவிட்டார்.

பெண் பிள்ளை பிறத்தால் உயிரோடு புதைத்தல், பல்லாண்டு காலமான கோத்திர சண்டைகள், மிதமிஞ்சிய மது பாவனை, பொய், ஏமாற்று போன்ற இழி செயல்களில் இருத்து மக்காவாசிகளை நல் வழிப்படுத்த முஹம்மத் நபி அவர்கள் வழி தேடினார்கள்.

தன் 40ஆவது வயதில் ஹிராக் குகையில் ஜிப்ரீல் என்ற வானவத் தூதுவர் மூலமாக இறை வழிகாட்டலை முதன் முறையாக பெற்று அதை மக்களிடம்  எடுத்துரைக்க ஆரம்பித்தபோதே பெரும் எதிர்ப்புகளை சந்தித்தார்.

இறைவனை மாத்திரமே வணங்குங்கள், நீதமாக நடந்து கொள்ளுங்கள், உறவுகளை சேர்ந்து நடந்து கொள்ளுங்கள் என்ற தன் செய்தியை மக்காவாசிகளுக்கு எடுத்துரைக்க தன்னாலான எல்லா  முயற்சிகளையும் மேற்கொண்டார். மக்காவின் தலைவர்கள் முஹம்மத்   நபியை தங்களுக்கு ஆபத்தாகக் கருதி அவரது செய்திகள் மக்களுக்கு சென்றடையாமலிருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இறுதியாக தன் உயிருக்கு ஆபத்தான நிலை எதிர்நோக்கியபோது தான் மிகவும் நேசித்த மக்கா நகரிலிருந்து வெளியேறி மதீனா நகருக்கு செல்ல வேண்டியேற்பட்டது. மதீனா மக்கள் அவரை வரவேற்றனர். அந்த மதீனா நகரமே பிற்காலத்தில் உருவான இஸ்லாமிய நாகரிகத்தின் அடித்தளமாகியது.

மதீனாவை நிர்வகிப்பதற்காக  அங்கிருந்த யூதர்கள் உட்பட பல்வேறு குழுக்களுடன் இணைந்து முஹம்மத் நபியவர்கள் எழுதிய  மதீனா சாசனம் எனும் மனித உரிமைகள் சாசனம் நவீன வரலாற்றாய்வாளர்களையும் அரசியல் விஞ்ஞானிகளையும்  கவர்ந்துள்ளது.

நபியவர்கள் வெறுமனே ஒரு மத போதகராக இருக்கவில்லை. அவர் ஓர் அற்புதமான வாழ்வொழுங்கை அறிமுகப்படுத்தி அதன் பிரகாரம் வாழ்ந்து காட்டினார்.  அவர் பற்றிய ஒவ்வோர் அம்சமும் பதிவு செய்யப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்படுவதோடு அவரைப் பின்பற்றுவோரால் முன்மாதிரியாக பின்பற்றப்படுகிறது. மேலும் அவர் ஒரு தந்தையாக, கணவராக, தலைவராக, நீதிபதியாக மற்றும் வழிகாட்டியாக சிறந்ததொரு முன்மாதிரியாக காணப்பட்டார்.

அவர் தனது 63ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புனித நகரமான மக்காவில் பிரபல்யமான ஓர் உரையை நிகழ்த்தினார். இது இன்று வரை உலக முஸ்லிம்களால் நீதியான சமுதாயத்திற்கான அத்திவாரமாக பார்க்கப்படுகிறது.

“அனைத்து மனிதர்களும் ஆதம் மற்றும் ஹவ்வாவிலிருந்து வந்தவர்கள். எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்.”

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்