வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப் பொதி, கடன் தவணைகளைச் செலுத்த நிவாரண காலம் - பசில் ராஜபக்ஷ உத்தரவு




 ( மினுவாங்கொடை நிருபர் )


   கொவிட்-19 வைரஸ் மீண்டும் தலைத்தூக்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் அத்தியவசிய சேவைகளைத் திறமையாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என, பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அலரி மாளிகையில் (27)  இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.
   மோசமான சூழ்நிலையிலும் மின்சாரம், நீர், எரிபொருள், எரிவாயு, போக்குவரத்து, சுகாதாரம், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட  அத்தியவசியமான சேவைகளை மக்களுக்கு  தொடர்ச்சியாகப் பெற்றுக் கொடுப்பதற்கு, முறையான நடவடிக்கையொன்றைத் திட்டமிடுவதாகவும், பசில் ராஜபக்ஷ இதன்போது அத்தியவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
   உலகில் பொருளாதார ரீதியில் சக்திவாய்ந்த நாடுகளும் கொவிட்-19 வைரஸிற்கு முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதிலும், இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், மக்களுக்கான அத்தியவசிய சேவைகளை விரைந்து பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
   சமூக ஊடகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்கள் தொடர்பில் இதன்போது கருத்துத் தெரிவித்த பசில் ராஜபக்ஷ, சில சக்திவாய்ந்த நாடுகளில் இலட்சக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு,  ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்நாட்டின் சுகாதாரப் பிரிவு, பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பிரிவு ஆகியன கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை "ஒரு நாடு" என்ற வகையில் பாராட்ட வேண்டும்.
   வைரஸ் காரணமாக ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைத் தடுப்பதுடன், பாதிப்புக்குள்ளாகக் கூடிய வயதானவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
   எனவே, பொது உதவிகள், ஓய்வூதியம் என்பவற்றை அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அரசாங்க அதிபர்கள் மற்றும் தபால் அதிபர்களுக்கும் குறித்த கலந்துரையாடலின்போது அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
   வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளை வழங்குவது தொடர்பிலும்,  இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்க அதிபர்கள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் ஒத்துழைப்பைப் பெற்று அந்நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளுமாறும், பசில் ராஜபக்ஷ  ஆலோசனை வழங்கியுள்ளார்.
   கடன் தவணைகளைச் செலுத்துவதற்கு நிவாரணக் காலமொன்றைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒரு வார காலமாக முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
   கொழும்பு நகருக்குள் கொவிட் வேகமாகப் பரவி வருகின்றமையால் அந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு, கொழும்பிற்கு வருகை தருவோரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக நிர்வாக அமைச்சிற்கு ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்து, பிரதேச மட்டத்தில் அரச அலுவலகங்களைப் பராமரிப்பது தொடர்பான வழிமுறை வகுக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது கலந்துடையாடப்பட்டது.
   அத்துடன், நபர்களுக்கு இடையிலான சமூக இடைவெளியைப் பேணி சுகாதாரத் துறையின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் ரயில்வேத் திணைக்களம் ஆகியவற்றினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், மக்கள் கொழும்பு நகருக்குள் வருகை தருவது முன்னரைவிடவும் மிகவும் குறைவடைந்துள்ளதாகவும், உயர்த்தரப் பரீட்சைகள் இடம்பெறுவதால் மாணவர்களின் வசதிக்கேற்ப பயணக் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
   அத்துடன், பரீட்சைத் திணைக்களம் மற்றும் பல்வேறு நிறுவனங்களினால் நடத்தப்படும் பரீட்சைகளை, இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு பிற்போடுமாறும், பசில் ராஜபக்ஷ  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இக்கலந்துரையாடலில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட அத்தியவசிய சேவைகளுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )