20 ஐ மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்த பின்னணி என்ன ?

 

 நூருள் ஹுதா உமர் . 


20 ஆம் திருத்த சட்டமூலம் வாக்களிக்க பாராளுமன்ற சபைக்கு வரும் முன்னரே. இந்த 20 ஆம் திருத்த சட்டமூலத்தை ஆதரிக்க எங்களின் எம்.பியை வலியுறுத்துவது எனும் தீர்மானத்தை எனது தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எடுத்திருந்தோம். அது தொடர்பில் எங்களின் கட்சி தலைவருக்கு மிகத்தெளிவாக விளக்கியிருந்தோம். எங்களின் நியாயத்தை விளங்கிய எங்களின் கட்சி தலைமை நெகிழ்வுத்தன்மையான போக்கை கடைபிடித்தார். இருந்தாலும் தனிநபரிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதை எங்களின் கட்சி தலைமை விரும்பவில்லை. எங்களின் மக்களின் பிரதிநிதிக்கு பக்கபலமாக நாங்கள் இருந்தோம் என கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவித்தார். 

கல்முனை மாநகர சபையில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.எம்.சத்தார், நிஸார் ஜே.பி, ஏ.எம். பைரோஸ், சட்டத்தரணி ரோஷன் அக்தர், உட்பட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இவ்வூடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் நால்வர் 20ஐ ஆதரித்தமையினால் எதிரணியில் மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஜே.ஆரின் காலத்தில் மக்களின் பசியை போக்க கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பானது ஸ்திரமான ஆட்சியை உருவாக்கி தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இலங்கையை உருவாக்க அப்போது தேவைப்பட்டது. காலக்கிரமத்தில் அந்த அரசியலமைப்பில் குறைபாடுகள் இருப்பதாக திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. 

முதல் இருந்த அரசியலமைப்பில் ஒருவர் இருதடவைகள் மட்டுமே ஜனாதிபதி தேர்தல் கேட்கலாம் என்று இருந்தது. அதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் எத்தனை தடவைகள் வேண்டுமாகினும் ஜனாதிபதி தேர்தல் கேட்கலாம் என்று மாற்றப்பட்டது. ஆனால் 19ஆம் திருத்தத்தில் மீண்டும் ஒருவர் இருதடவைகள் மட்டுமே ஜனாதிபதி தேர்தல் கேட்கலாம் என்று மாற்றப்பட்டதும் பல ஆணைக்குழுக்களை அறிமுகம் செய்தலும் நடைபெற்றது. அந்த திருத்தத்தில் பாராளுமன்ற ஆயுள் காலம் முதல் பல்வேறு விடயங்கள் மாற்றம் பெற்றது. 

மஹிந்தவை வீழ்த்த தற்காலிய கூட்டாக அமைக்கப்பட்ட ரணில்- மைத்திரி ஆட்சியில் பிந்நாளில் முரண்பாடுகள் வரும் என்பதை அறிந்து உடனடியாக இந்த திருத்தத்தை கொண்டுவந்தார்களே தவிர நாட்டின் நலனுக்காக கொண்டுவரவில்லை. அந்த திருத்த சட்டத்தில் கொண்டுவந்த தகவலறியும் சட்டமூலம் வீணான தொல்லையாக இருக்கிறது. தேவையில்லாத தகவல்களையெல்லாம் கேட்கிறார்கள் இதற்கு பதிலளிப்பது கடினமான விடயமாக இருக்கிறது. நிர்வாகத்தை கொண்டுசெல்ல மிகப்பெரும் இடையூறாக அந்த தகவலறியும் சட்டமூலம்  இருக்கிறது. தகவலறியும் சட்டமூலத்தை புத்திஜீவிகள் பயன்படுத்துவதில்லை. நிர்வாகத்தை முடிச்சிப்போட என்னும் துஷ்ட சிந்தனை கொண்டோர்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த தகவலறியும் சட்டமூலம் இந்த 20 ஆம் திருத்தத்தில் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அந்த சட்டத்தையும் நீக்காமல் வைத்துள்ளார்கள். 

2021 இல் புதிய அரசியலமைப்பு வரப்போவதாக கதைகள் வெளிவந்துள்ளது. ஜனாதிபதி அது தொடர்பில் பேசியிருக்கிறார்.ஆகவே இதுவும் தற்காலியமானதாகவே நான் பார்க்கிறேன். இப்போது நாடு இருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. வட கிழக்குக்கு வெளியே மூன்றிலிரண்டு பெரும்பான்மை முஸ்லிங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறது. மீதியினர் வடகிழக்கில் வாழ்கிறார்கள். கடந்த கால கசப்பான அனுபவங்கள் எங்களுக்கு நன்றாக தெரியும். எங்களின் மக்களையும் எங்களின் உடமைகள், மதஸ்தாபனங்களை பாதுகாக்கவேண்டிய தேவையிருக்கிறது. 

எங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தேவையிருக்கிறது. எங்களின் சமூகத்தை பாதுகாக்கவேண்டிய சமூக பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. மலையகத்தவர்களை அவர்களின் கட்சிகளும், வடகிழக்கு தமிழர்களை தமிழ் தேசியவாதிகளும் வழிநடாத்துகிறார்கள். கடந்த காலங்களில் அவர்களுக்கான உதவிகளை முஸ்லிம் சமூகம் செய்திருக்கிறது. இனியும் செய்ய பின்நிற்க போவதில்லை. 

எமது சமூகம் வேண்டி நிற்கின்ற அபிவிருத்திகள், வேலைவாய்ப்புக்கள் அதிலும் குறிப்பாக கல்முனையின் தேவைகளை பெற வேண்டியுள்ளது. ஆதரவளிக்காமல் விட்டிருந்தால் இங்கு வாழும் தமிழ்,முஸ்லீம்,சிங்கள மக்களுக்கிடையே புரிந்துணர்வு இல்லாமலாகி விடும் நிலை உருவாகி இருக்கும். ஆதரவளித்ததன் மூலம் அதை நாங்கள் காத்திருக்கிறோம். முஸ்லிங்களுக்கு பரவலாக இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க சேர் ராசிக் பரீட், பதியுதீன் மஹமூத், எம்.எச்.எம். அஸ்ரப் போன்றோர்களின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். 

கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்களில் மைத்திரிக்கும் சஜித்துக்கும் ஒட்டு மொத்தமாக வாக்களிக்க தீர்மானம் செய்து வாக்களித்தோம்  அதன் மூலமாக முஸ்லிம் சமூகத்துக்கு அவர்களினால் கிடைத்த நன்மை என்ன ? ஒன்றும் இல்லாத நிலையில் சிங்கள மக்களினால் வழங்கப்பட்டிருக்கும் நிலையான அரசுக்கான ஆதரவுக்கு எங்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது எனும் செய்தி பெரும்பான்மை இன மக்களுக்கு உரத்து சொல்லியிருக்கிறது. அதன் மூலம் எதிர்காலத்தில் தேசிய இனம் மூன்றுக்குமிடையே இன ஒற்றுமை உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு பச்சை சிக்னல் காட்டியுள்ளோம் - என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்