முல்லையில் கடலட்டைத்தொழிலை முன்னெடுக்கலாமா என ஆராய்வு!

 

 
விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் கடல் அட்டை தொழில் செய்வது தொடர்பாக, மாவட்ட மீனவர்களுடைய நிலைப்பாட்டினை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், மற்றும் சமேளனம் என்பன 15.09.2020 நேற்றையநாள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த கலந்துரையாடலானது முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவிற்கு வந்துள்ளதுடன், பிறிதொரு நாளில் மீண்டும் இதுதொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறிப்பாக முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் அட்டை பிடிக்கும் தொழிலைச் செய்வதற்காக வெளிமாவட்டத்தவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும், உள்ளூர் மீனவர்களுக்கு அட்டைத் தொழில் தொடர்பில் பயிற்சியழிப்பது தொடர்பாகவும் இம்மாதம் 07ஆம் திகதியன்று, முல்லைத்தீவு மாவட்ட செயலரின் தலைமையில், மாவட்டசெயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இக் கலந்துரையாடலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு மீனவ சங்கங்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் அனைத்து மீனவ சங்கங்களின் அனுமதியுடன்தான் முல்லைத்தீவு கடற்பரப்பில் அட்டைத்தொழில் செய்வது தொடர்பில் முடிவெடிக்கவேண்டுமென அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மீனவர் சங்கத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய அட்டைத் தொழில் தொடர்பில் ஏனைய மீனவர் சங்கங்களுடைய நிலைப்பாட்டினை மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம் மற்றும்சமேளனம் என்பவற்றுடன், மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரியும் இணைந்து ஆராயுமாறு மாவட்ட செயலரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடற்றொழிலாளர் சமாசம் மற்றும் கடற்றொழிலாளர் சமேளனம் என்பவற்றினால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, கடந்த 15.09 செவ்வாய்க் கிழமையன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசக் கட்டடத்தில் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலுக்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிக்கு, சமேளனம் மற்றும் சமாசம் அழைப்பு விடுத்திருக்கவில்லை. இதனால் இக் கூட்டத்தில் அட்டைத் தொழில் செய்வது தொடர்பில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

இருப்பினும் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட பெரும்பாலான மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் அட்டைத் தொழில் செய்ய அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்

குறித்த கூட்டத்தில் சமேளனம், மற்றும் சமாசம் என்பன தமது செயற்பாடுகளை முறையாகச் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் மீனவர்களால் முன்வைக்கப்பட்டதுடன், சமாசம், சமேளனம் என்பவற்றின் நிர்வாகம் மாற்றப்படவேண்டும் எனவும் மீனவர்களால் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மீனவர்கள் கூட்டத்திலிருந்து இடை நடுவே வெளியேறிமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்