சுமந்திரனின் படைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

 

யாழ்.மத்திய கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தல் விருப்பு வாக்கு முடிவு வெளியான போது இடம்பெற்ற குழப்பத்தில் அங்கிருந்த கட்சிகளின் ஆதரவாளர்களை அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் தாக்கியதாக 3 பேர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் இருவர் சிறப்பு அதிரடிப் படையினருக்கு எதிராகவும் ஒருவர் பொலிஸாருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொலிஸாரின் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன், தனக்கு பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்குஎதிராக முறைப்பாட்டை வழங்கினார்.

தவராசா துவாரகன் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் கோரியிருந்தது.

இதேபால் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி), முன்னாள் விடுதலைப் புலி போராளி தனுபன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்) ஆகியோரும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்