கருணா அம்மானிற்கு அம்பாறை மக்கள் வாக்களிக்க வேண்டும்-விடுதலைப்புலிகள் கோரிக்கைபாறுக் ஷிஹான்

எதிர்வரும் தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் கருணா அம்மானின் கரங்களை பலப்படுத்தி அவரை வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள்  கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா  தெரிவித்தார். 

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் நிலைமை தொடர்பாக காரைதீவு பகுதியில் இன்று(2) முற்பகல் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்

முப்பது வருடமாக போராடிய எமது போராளிகளின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நாம் எமது புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட  போராளிகளின் நலனுக்காக அம்பாறை மாவட்டத்தில் கருணா அம்மானை ஆதரிக்குமாறு மக்களை கேட்கின்றோம்.புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினராகிய நாங்கள் ஏன்  எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிக்கவில்லை என்பது மக்களிற்கு தெரியும்.அவர்கள் சொல்வதை செய்வதில்லை.காலா காலமாக ஏமாற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களை எமது மக்களிற்காக தந்துள்ளனர்.

கடந்த காலங்களில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பில் எமது கட்சியினால்  நிபந்தனைகள் உள்ளடங்கிய கடிதமொன்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால் அதற்கான பதில் எமக்கு இதுவரை வழங்கப்படவில்லை.எனவே தான் தற்போது கருணா அம்மானை எமது கட்சி அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு அமைச்சராக வருவதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றது.இது தவிர எதிர்வரும் தேர்தலில் எமது மக்களால் தெரிவாக உள்ள கருணா அம்மானின் வாக்கு வங்கிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  உட்பட  பல புதிய கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் சிதறடிக்க  களத்தில் இறங்கியுள்ளன.

எனவே தான் கருணா அம்மானின்  வெற்றியின் மூலம் பாராளுமன்றம் சென்ற பின் கடந்த காலங்களைப் போன்று கூட்டமைப்பினை போன்று  அசமந்தப் போக்கோ அல்லது காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டிலோ ஈடுபடாமல் தமிழ் மக்கள் சார்பில் பேரம்பேசும் சக்தியாக இயங்க வேண்டும் என அவரை கேட்டுக்கொள்கின்றோம்