தமிழ் விவசாய காணிப்பிரச்சினைக்கு தீர்வு - கலந்துரையாடலும் இடம்பெற்றது

 

 


 விஜயரத்தினம் சரவணன்


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவுக்குட்பட்ட, அக்கரைவெளி வயல் நிலங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, அக்காணிகளுக்குரிய தமிழ் விவசாயிகள் மூவர் வனவளத் திணைக்களத்தினரால் 25.08.2020நாள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அத்தோடு குறித்த அக்கரைவெளிப் பகுதியில் தமிழ் மக்கள் விவசாயம் செய்யக்கூடாதென வனவளத் திணைக்களத்தினர், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும், இராணுவத்தினர் மிரட்டியதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் 26.08.2020 நாள் குறித்த அககரைவெளி வயல் காணிகளுக்குரியவர்களான, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், தென்னமரவடி ஆகிய பகுதிகளில்வசிக்கின்ற தமிழ் விவசாயிகள், மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு மாவட்ட செயலரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கலந்துரையடலின் முடிவில் எதிர்வரும் சனிக்கிளமையன்று இக் காணிப் பிணக்குத் தொடர்பில் ஆராயவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

அக்கரைவெளியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், தென்னமரவடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு வயல் நிலங்கள் காணப்படுகின்றன. அங்கு ஏறக்குறைய 500ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்குரிய காணிகள் காணப்படுகின்றன.

குறித்த காணிகளில் கடந்த வருடமும் தமிழ் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் நேற்றைய தினமும், நேற்று முன் தினமும் காணிகளுக்குரிய எமது தமிழ்மக்கள் குறித்த வயல் நிலங்களைச்சீரமைக்கும் பணிகளில் ஈடுபடடிருந்தனர். அப்போது அங்கு சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை வனவவளத் திணைக்களத்தினர் கைதுசெய்து இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இக்காணிகள் அனைத்தும் எமது தமிழ் மக்களுடைய பூர்வீகக் காணிகளாகும். அதற்குரிய ஆவணங்களும் அவர்களிடம் இருக்கின்றது. குறிப்பாக 1957ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணி அனுமதிப் பத்திரங்கள் அவர்களிடம் உள்ளன. இதனைவிட பிரித்தானிய அரசினால் வழங்கப்பட்ட காணி உறிதிகளைக்கூட அந்த மக்கள் தம்வசம் வைத்துள்ளனர்.

இவ்வாறு இருக்கும்போது, தற்போது குறித்த காணிகளுக்குள் எமது மக்கள் விவசாயநடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அத்துமீறி நுழைந்துகொண்டு சிலர் அடாவடித்தனமாகச் செயற்படுகின்றனர்.

இந்த விவசாயநிலங்கள் எமது தமிழ் மக்களுக்குச் சொந்தமானவையாகும்.அந்த விவசாய நிலங்களில் அவர்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் அவர்களால் தமது வாழ்வாதாரத்தை கொண்டுநடாத்த முடியும்.

இப்படியிருக்கும்போது இந்தக் காணிகளுக்குரிய கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் மற்றும் தென்னமரவடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமக்குச் சொந்தமான இக் காணிகளில் விவசாயம் செய்வதற்கு வழிவிடுங்கள் என்றே கேட்கின்றனர்.

இந் நிலையில் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என ஒவ்வொரு தரப்பினரும் எமது மக்களைக் கைதுசெய்து, அவர்களைத் துன்புறுத்தினால் ,அந்த மக்கள் தமது வழ்வைக் கொண்டு நடாத்துவது எவ்வாறு?

இது தொடர்பாக, 26.05.2020 இன்றையநாள் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், தென்னமரவடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் நானும் சென்று, முல்லைத்தீவு மாவட்ட செயலரை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

இக்கலந்துரையாடலின் முடிவில், எதிர்வரும் சனிக்கிழமையன்று கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தின் காணி உத்தியோகத்தர்கள், மற்றும் உரிய அதிகாரிகள் கொக்கிளாய்க்கு வருகைதந்து, இக் காணிப் பிரச்சினைக்குரிய மக்களை சந்தப்பதாகவும், அங்கு யாருடைய காணிகள் என்ற விபரங்களை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும்படியும், அதற்குப் பிற்பாடு மீண்டும் இது தொடர்பில் ஓர் கலந்துரையாடலை ஒழுங்குசெய்து இந்த மக்களுக்கான பிரச்சினைகளைசுமூகமாகத் தீர்த்துவைப்பதாக மாவட்டசெயலரால் தெரிவிக்கப்பட்டது.

அத்தகையதொரு சுமூகமான நிலையினைத்தான் இம் மக்களும் எதிர்பார்க்கின்றனர். நிச்சயமாக இம் மக்களுக்குரிய காணிகள் அவர்களிடம் கையளிக்கப்படவேண்டும் - என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்