சஜித் தரப்பும் இனவாதத்தை பேச ஆரம்பித்தள்ளது அமீர் அலி தெரிவிப்பு

 

 

எஸ்.எம்.எம்.முர்ஷித்


எதிர்காலத்தில் நாங்கள் பௌத்த வாக்குகளை பெற வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களாகிய நீங்கள் எங்களுக்கு கொஞ்சம் விட்டுக் கொடுப்பு செய்து தர வேண்டும் என்று சஜித் அணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

 

ஓட்டமாவடி பிரதேச சபை பின் வளாகத்தில்; அமீர் அலி பேசுகிறார் என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

 

கல்குடா பிரதேச மக்களோ நாங்கள் தேர்தல் காலங்களில் கூறினோம் ராஜபக்ச அணியினர் 151 ஆசனங்களை எடுத்தால் என்ன நடக்கும் என்று கூறினோம். இது ஒரு சுகமான பாராளுமன்றம் இல்லை இது ஒரு சுமையான பாராளுமன்றம் என்பதை நாம் எடுத்துச் சொன்னோம். இப்போது அது சுகமா? சுமையா? என்று அங்கு போயுள்ளவர்களுக்கும் தெரியும். அனுப்பியவர்களுக்கும் தெரியும் என்று துல்லியமாக சொல்ல முடியும்.

 

எனவே வரவுள்ள அரசியல் நிகழ்வுகள் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு அதிர்வு தரப்போகின்ற அரசியலாக இருக்கும் என்பதை என்னால் சொல்ல முடியும். 151ஐ தாண்டியது என்பது சிறுபான்மை சமூகத்துடைய கழுத்துகளுக்கு நீட்டப்பட்டுள்ள அரிவாள் என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடக் கூடாது.

 

மத ரீதியான சிந்தனைகளை மேலோக்கி உலக அரசியலில் இப்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம் முஸ்லிம்களை மையப் பொருளாக்கி முஸ்லிம்களை ஒரு கேவலம் கெட்ட சமூகமாக்கி, அவர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று சொல்லித்தான் முழு உலகத்திலும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள்.

 

அதேமாற்றம் தான் இலங்கையிலும் நடந்தேறியது அதன் மூலம் கிடைத்த பிரதிபலன் தான் 151 ஆசனங்களை பெற்றுள்ளனர். எனவே இந்த நிகழ்ச்சி நிரல் கோட்டாபய ராஜபக்ஸ மாத்திரம் என்றும் அவருடைய அரசாங்கம் மாத்திரம் என்றும் நீங்கள் நினைத்து விடாதீர்கள் சஜித் பிரேமதாசாவுடைய காலத்திலும் இதை பேச வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமை சஜித் அணிக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை இவ்விடத்தில் நான் சொல்ல வேண்டும். அவர்களும் இனவாதத்தைப் பேசினால் தான் வரவுள்ள காலங்களில் எதையாவது சாதிக்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

அதே அடிப்படையில் தான் சஜித் அணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றில் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பேசினார். எதிர்காலத்தில் நாங்கள் பௌத்த வாக்குகளை பெற வேண்டுமாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு கொஞ்சம் விட்டுக் கொடுப்பு செய்து தர வேண்டும் என்கின்ற அமைப்பிலே அவர் பேசியது எங்களது உள்ளத்தை நெகிழ்ந்தது.

 

அந்த கூடத்தில் தொடர்ந்தேட்சியாக இருப்பதாக இல்லையா என்ற தீர்மானத்திற்கு அப்பால் இந்த காலகட்டத்தில் அதனோடு பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. கூட்டம் முடிந்ததும் அவரிடம் ஏன் இவ்வாறு கூறினீர்கள் என்று கேட்ட போது அதனை சொல்லித்தானாக வேண்டும். இதனை ஒலித்து பேச வேண்டியளது கிடையாது. இது நாட்டில் மட்டுமல்ல உலகத்திலே நடந்து கொண்டிருக்கின்ற செயல். முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்கின்றார்கள். முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை பதித்து விட்டார்கள் முழு உலகமும் இந்த அரசியல் மாற்றத்தினை விரும்புகின்றது. இதனை நான் சொன்னது பிழையா என்று கேட்டார். உலக அரசியலில் நடக்கும் நடப்பை பேசினேனே ஒழிய இலங்கையில் அவ்வாறு பேசப்படுகின்றது என்று சொல்லவில்லை என்றார்.

 

பாராளுமன்ற தொடர்பில் 19வது அரசியல் திருத்தம் இல்லாமல் செய்யப்பட்டு 20வது அரசியல் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி கூறினார். அதுபோன்று தேர்தல் சீர்திருத்தமும் கொண்டுவரப் போகின்றார்கள். இது இவ்வாறு நடக்கும் என்று 2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது கூறினேன்.

 

அரசியல் சந்தையில் கல்குடாப் பிரதேசத்தில் அரிசி பையையும், பணத்தினையும் தூக்கி திரிந்த வரலாறுகளை நாம் மறந்து விட முடியாது. ஏறாவூரில் ஆஐடத் தொழிற்சாலைக்கு சென்றவர்களை தேர்தல் பணிக்கு அமர்த்தினார்கள்.  மட்டக்களப்பு மாவட்டம், கல்குடாவுக்கு யார் வந்தும் ஜனநாயக ரீதியில் அரசியல் செய்வதற்கு தடையில்லை அது யாராக இருந்தாலும் பரவாயில்லை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் வந்து ஜனநாயக அரசியலை முன்னெடுக்க முடியும்.

 

ஆனால் இந்த ஜனநாயக உரிமையை பணம் கொடுத்து அரிசி பேக் கொடுத்து வாங்குவதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது. இருந்தும் அவ்  விடயத்திலிருந்து யாரை எப்படி பாதுகாத்துக் கொள்வதென்ற சாணக்கியம் எங்களுக்கு தெரியாமல் இருக்கிறது ஏனென்றால் அவர்கள் சூட்சுமமாக அந்தப் பணியைச் செய்கிறார்கள். இரவுப் பொழுதுகளிலும், நடுநிசியிலும் எதிர்பார்க்காதவர்கள், நினைத்துப் பார்க்காதவர்கள் எல்லாம் அந்த மூடைகளை சுமந்து அரசியல் வரும் போது எமது கல்குடா பிரதேசத்தினை அரசியல் சந்தையாக பார்க்கின்றார்கள்.

 

இந்த விடயத்தில் எதிர்காலத்தில் கல்குடா சமூகம் மிகத்தெளிவாக இருந்து கொள்ள வேண்டும். கல்குடாவில் ஒரு பிரதிநிதித்துவம் வரக்கூடாது என்று சில அரசியல் முகவர்களுக்குத் தேவையாகவுள்ளது. ஏனென்றால் இந்தப் பிரதேசத்தில் ஒரு பிரதிநிதித்துவம் வருமாக இருந்தால் தங்களுடைய முகவர் வேலைகளை செய்ய முடியாது என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

ஒரு அரசியல் தலைமை இல்லாமல் இருந்தால் தான் தாங்கள் அதில் புகுந்து விளையாட முடியும். வெளியூர் அரசியல் வாதிகளை வைத்து இங்கு தொழில் செய்ய முடியும்; இந்த பிரதேசத்தில் உள்ளவர்களுடைய விடயங்களை நாங்கள் பார்ப்பவர்களாக தொழில் செய்ய முடியும். என்றெல்லாம் கல்குடாப் பிரதேசத்திலுள்ள முகவர்கள் கல்குடாவுக்கு எப்பொழுதும் பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்க கூடாது என்ற பிரார்த்தனையில் தான் உள்ளார்கள் என்றார்.

 

ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எல்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்