அம்பாறை மாவட்டத்தில் மனித பாவனைக்கு உதவாத மீன் வகைகள் விற்பனை

 

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான மீன்களின் பிடிபாடு அதிகரித்த போதிலும் மனித பாவனைக்கு உதவாத மீன் வகைகள் அண்மைக்காலமாக  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 குறித்த மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபை நிந்தவூர் பிரதேச சபை  கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் கடலில் பிடிக்கப்படும்  அதிகளவான  மீன்கள்  வெளி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுவதனால் உள்ளுர் சந்தைகளில்  மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் எஞ்சிய மீன்களை அதிகளவான விலையில் விற்பனை செய்ய சந்தைகளில் உள்ள  விற்பனையாளர்கள்  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதே வேளை சந்தைகளில் விற்பனை இன்றி தேங்கி கிடக்கின்ற மீன்வகைகளை பல நாட்களுக்கு களஞ்சியப்படுத்தி வைத்து விற்பனை செய்வதற்காக  ஐஸ்கட்டி இட்டு ரெஜிபோம் பெட்டியில் 3 தொடக்கம் 4 நாட்களுக்கு மேலாக அடைத்து விற்பனை செய்வதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விடயம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர்  மீனவ குடும்பங்கள் பல  தமது வாழ்வாதாரத்தை இழந்த போதிலும் அரசாங்கம் உட்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களது வாழ்வாதாரங்களை கருத்திற் கொண்டு உதவிகளை வழங்கி இருந்தது.
 
மேலும் தற்போது   சூரை ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 700 வரை விற்பனை செய்யப்பட்டதுடன்    பாரை மீன் ஒரு கிலோ 1200 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1300 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 700 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 600 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 1200 ரூபாயாகவும் வளையா மீன் 600 ரூபா திருக்கை மீன் ஒரு கிலோ 800  ஆகவும்   தற்போது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளினால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகள் மீன் சந்தைகளில்  வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இருந்தபோதிலும் கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குபட்ட மருதமுனை , கல்முனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது,நற்பிட்டிமுனை  பகுதிகளில் அதிகளவான விலை ஏற்றங்கள் தான்தோன்றித்தனமாக சில மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .இதனை கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்