திணைக்களங்களின் கெடுபிடி; நந்திக்கடலும், நாயாறும் பறிபோகும் அபாயம்

 

 


 விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவில் அண்மைக்காலங்களாக, வனவளத் திணைக்களம், மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை எதிர்காலத்தில் நந்திக்கடல் மற்றும் நாயாறு ஆகிய பகுதிகளும்,அதனை அண்டிய பகுதிகளும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்கிளாய் கிராம அலுவலர் பிரிவில்உள்ள, பெரியவெளி, பனிச்சைமோட்டை, கண்ணாட்டி, அக்கரைவெளி ஆகிய பகுதிகளில் 82தமிழ் பயனாளிகளுக்குச் சொந்தமான 390ஏக்கர் விவசாய நிலங்களும், மாரியாமுனை என்னும் இடத்தில் 28 தமிழ் பயனாளிகளுக்குச் சொந்தமான 113ஏக்கர் நிலங்களும் காணப்படுகின்றன.

இதிலே குறிப்பாக அண்மையில் அக்கரை வெளிப் பகுதியில் தமிழ் மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும்போது, வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களங்கள் இணைந்து எமது விவசாயிகளைத் தடுத்தும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுமுள்ளர்கள்.

இந்தக் காணிகளுக்குச் சொந்தக்காரர்களாக கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், தென்னமரவடி மக்கள் காணப்படுகின்றனர். இந்த மக்களிடம் காணிக் கடடளைச்சடடத்தின்படி வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் காணப்படுகின்றன. அத்தோடு இலங்கை சுதந்திரம் அடையாத காலத்திற்கு முன்னர் பிரித்தானிய அரசினால் 1931.11.07ஆம்திகதி மற்றும் 1932ஆம்ஆண்டு வழங்கப்பட்ட காணி உறுதிகளும் அவர்களின் கைவசம் இருக்கின்றது.

இந் நிலையில் தமிழ் மக்கள் தங்களுடைய விவசாயநிலங்களில், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, தடுக்கப்பட்டதென்பது அராஜகத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகின்றது.

இது தவிர வனஜீவராசிகள் திணைக்களத்தினுடய செயற்பாடுகளைப் பார்க்கும்போது, மக்கள் மிகவும் வேதனையடைகின்றார்கள். எமது மக்களிடம் இந்தக் காணிகளுக்கான ஆவணங்கள் இருக்கும்போதே இப்படித் தடுக்கின்றார்கள் என்றால், எதிர்காலத்தில் வட்டுவாகல் நந்திக்கடல் வளாகம் மற்றும், நாயாறுப் பகுதிகளுக்குள்ளும் செல்வதற்குத் தடுக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடத்தே காணப்படுகின்றது.

குறிப்பாக கடந்த 2017.01.24ஆம் திகதியன்று, நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும், வனஜீவராசிகள் அமைச்சராக இருந்த கௌரவ காமினி ஜெயவிக்ரம பெரேராவினால் நந்திக்கடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமாக 4141.67 ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப் பரப்புக்களும், நாயாறு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமாக 4464.35ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப் பரப்புக்களையும் 469 ஆம் அத்தியாயமான தாவர விலங்குப் பாதுகாப்புக் கட்டளைச்சட்டம், 2ஆம் பிரிவின், 1ஆம் உட்பிரிவின் கீழான கட்டளைச்சட்டம் என்ற தலைப்பின் கீழ் வர்த்தமானிமூலம் நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடம், நாயாறு இயற்கை ஒதுக்கிடம் என வர்த்தமானிமூலம் வனஜீவராசிகள் திணைக்களம் தங்களுடைய ஆளுகைக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

ஏறக்குறைய இவை 21515ஏக்கர் நிலமும், நீர்ப்பரப்புமாக இதற்குள் அடங்குகின்றன.

எனவே இந்த இடங்களுக்குள்ளும் மக்கள் செல்வது தடுக்கப்பட்டால் சுமார் 9000குடும்பங்களுக்குமேல் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது. ஆகவே அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தின் நிலைமைதான் என்ன? இதை நம்பி வாழும் மக்களை பட்டினியை நோக்கித் தள்ளப்போகின்றார்களா?

ஒரு நாட்டின் அரசாங்கம் என்றால், நாட்டிலுள்ள தனது மக்களை காப்பாற்றவேண்டியது அரசாங்கத்தினுடைய பொறுப்பாகும். ஆனால் இங்கு தமிழ் மக்கள் விடயத்தில் இலங்கை அரசு அதற்கு மாறாகவே செயற்படுகின்றது - என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்